ARTICLE AD BOX
லாகூர்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரை இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது. ஆனால் போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் இருந்தே வெளியேறி இருக்கிறது.
இது ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களையும் வேதனை அடைய செய்திருக்கிறது. இதனால் லட்ச லட்ச ரூபாய் செலவு செய்து துபாய்க்கு வந்து போட்டியை நேரில் பார்த்த பாகிஸ்தான் ரசிகர்கள் மனவேதனை அடைந்திருக்கிறார்கள்.

இந்தியா வெற்றி பெற்றதும் மைதானத்தை விட்டு வெளியேறிய அவர்கள் தங்களுடைய ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பலரும் கண்ணீர் மல்க இனி தாங்கள் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு அளிக்க போவதில்லை என்று கூறியிருக்கிறார்கள். இது குறித்து துபாயில் பேசிய ரசிகர் ஒருவர்," நான் விசா மற்றும் டிக்கெட் ஹோட்டல் செலவு என பல லட்சம் ரூபாய்களை செலவு செய்து பாகிஸ்தான் போட்டியை பார்க்க துபாய் வந்தேன். ஆனால் போராடாமலேயே எங்களுடைய அணி சரண்டர் ஆகி விட்டது."
" எங்களுக்கு அவ்வளவு மன வேதனையாக இருக்கிறது. என்னுடைய பணமெல்லாம் வீணாகிவிட்டது.இனி நாங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க போவதில்லை "என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசி இன்னொரு ரசிகர்,"பாகிஸ்தான் அணியில் உள்ள வீரர்கள் யாரும் சர்வதேச அளவில் விளையாட தகுதியற்றவர்கள். ஒரு காலத்தில் பெரிய அணிகளை வீழ்த்திய பாகிஸ்தான் தற்போது நேபால், ஜிம்பாப்வே எதிராக வெல்வது சாதனையாகிவிட்டது."
"விராட் கோலியை பார்த்து எப்படி விளையாட வேண்டும் என பாபர் அசாம் தெரிந்து கொள்ள வேண்டும். இனி பாபர் அசாம் கிங் கிடையாது, விராட் கோலி மட்டுமே ஒரே கிங்" என்று கூறி இருக்கிறார். இதேபோன்று பாகிஸ்தான் நாட்டின் பசிலாபாத்தில் போட்டியை பெரிய திரையில் பார்த்த ரசிகர்கள், தோல்விக்கு பிறகு கடும் ஆத்திரம் அடைந்தனர். அதில்,இனி நாங்கள் இந்திய அணிக்கு தான் ஆதரவளிக்க போகிறோம். பாகிஸ்தான் அணிக்கு ஆதரவளிக்க முடியாது. இதே போல் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எந்த காலத்திலும் இந்தியாவை பாகிஸ்தானால் கிரிக்கெட்டில் வீழ்த்த முடியாது என்று தங்களது வேதனையை வெளிப்படுத்தி இருந்தனர்.