வெறும் பில்ட்-அப் தான்... பிசுபிசுத்துப் போன இந்தியா - பாக். போட்டி என்னும் ‘நாடகம்’!

3 hours ago
ARTICLE AD BOX

Published : 24 Feb 2025 11:48 AM
Last Updated : 24 Feb 2025 11:48 AM

வெறும் பில்ட்-அப் தான்... பிசுபிசுத்துப் போன இந்தியா - பாக். போட்டி என்னும் ‘நாடகம்’!

<?php // } ?>

பாகிஸ்தானை வீழ்த்தியாகி விட்டது, ரசிகர்களின் நிம்மதிப் பெருமூச்சுடன் அவர்களது சூப்பர் ஸ்டார், அணியின் சுமை விராட் கோலி கடைசியாக சதம் அடித்து அவரது ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் பொதுவாக கிரிக்கெட்டுக்கு இத்தகைய வெற்றியும் கோலியின் சதமும் நல்லதா என்ற கேள்வி எழாமல் இல்லை.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்ற பில்ட்-அப்பை தயவு செய்து ஊடகங்களும் ஐசிசியும் நிறுத்துவது நல்லது. உயிரோட்டமே இல்லாத இந்த ஆட்டம் அதை விட சவசவ என்று கோலியின் இழுவையான ஒரு இன்னிங்ஸ். இவையெல்லாமுமே பில்ட்-அப்புக்கு நிகராக இல்லை என்பதோடு, ஏதோ இந்தியா ஜெயிப்பதற்கும், கோலி சதம் எடுப்பதற்காகவும் நடத்தப்பட்டக் காட்சிப் போட்டி (exhibition match) போல் ஆகிவிட்டது.

கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் பாகிஸ்தானில் எந்தவித ஐசிசி தொடரும் நடத்தப்படாமல் தனிமைப்படுத்தப்பட்டது. உண்மையில் அதிகாரம் பிசிசிஐ தலைமையில் ஒன்றிரண்டு பணபல வாரியங்களிடம் குவியும் போது, அவர்கள் எடுக்கும் முடிவே ஐசிசி முடிவாக மாறும் போது 'தன்னலக்குழு ஆட்சி’யாகவே (oligarchy) அது அமையும். இது ஜனநாயக அமைப்பு அல்ல. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாகக் காவு வாங்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, அந்த வாரியத்தின் நடைமுறைகள், நிர்வாகக் கோளாறுகள், தகராறுகள் என்று உள்கலகங்களும் அந்த நாட்டின் கிரிக்கெட்டை கரையான் புற்று போல் அரித்து வருவதும் உண்மைதான். இந்நிலையில் ஐசிசி தொடரை அவர்கள் நடத்துகிறேன் பேர்வழி என்று அவமானத்தையே சந்தித்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் எந்த ஒரு போராட்டக்குணமும் இல்லை, ஆக்ரோஷமும் இல்லை. செத்தவன் கையில் வெற்றிலைப் பாக்குக் கொடுத்தது போல் இருந்தது மேட்ச். இப்போதெல்லாம் 45 ஓவர்கள் கொண்ட லீக் மேட்சிலேயே 240 ரன்கள் சர்வ சாதாரணமாக அடிக்கிறார்கள் எனும் போது ஒன்றுமில்லாத பிட்சில் அதுவும் பாகிஸ்தான் 241 ரன்கள்தான் எடுக்க முடிகிறது என்றால் நம்ப முடியவில்லை. பாகிஸ்தான் நியூஸிலாந்துக்கு எதிராக சேஸிங் செய்து ஒன்றும் முடியவில்லை என்பதால் இந்தப் போட்டியில் பேட்டிங் தேர்வு செய்ததாகச் சொல்லிக் கொண்டாலும், சேசிங் பிட்சில் முதலில் பேட்டிங் எடுத்தது பெரிய கேள்விக்குறி.

இரண்டாவது இமாம் உல் ஹக்கை எங்கிருந்தோ இங்கு கொண்டு வந்து இறக்கினார்கள். முகமது ஷமிக்கு லெந்த்தும் கிடைக்கவில்லை, ஒன்றும் கிடைக்கவில்லை. முதல் ஓவரில் 5 வைடுகளுடன் 11 பந்துகளை வீசினார். அவர் இந்த சொத்தையான பவுலிங்கிலேயே பவுண்டரி அடிக்க முடியாமல் 26 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து இல்லாத சிங்கிளுக்கு ஓடப்போய் அக்சர் படேலின் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனது தற்கொலையே.

ஷாஹின் அஃப்ரீடியின் 143 கிமீ வேகப்பந்து ரோஹித் சர்மாவின் ஸ்டம்புகளை உடைத்ததும் சுப்மன் கில்லிற்கு அப்ரார் அகமது வீசிய அந்த புதிர் பந்தும் தவிர பாகிஸ்தானுக்கு இந்தப் போட்டியில் நினைத்துப் பார்க்க ஒன்றுமில்லை. பாகிஸ்தான் 34-வது ஓவரில் 151/2 என்று இருந்த நிலையிலிருந்து அடுத்த 90 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது, எந்த ஒரு ஃபைட்டும் இல்லை. அதுவும் அனுபவமற்ற ஹர்ஷித் ராணாவின் ஸ்லோ பந்துகளை அடிக்க முடியாமல் திணறியது என்ன ரக பேட்டிங் என்ற ஐயத்தையே எழுப்பியது.

இவ்வளவு பில்ட்-அப் கொடுத்த போட்டி பிசுபிசுத்து சவசவவென்று போய் பார்க்கச் சகிக்காமல் போய் விட்டது. இதில் விராட் கோலியின் சதம் சிலருக்கு ஆறுதல் அளிக்கலாம் ஆனால் விராட் கோலியின் மோசமான, மந்தமான சதம் எதுவென்றால் அதை இதுதான் என்றே கூறலாம். சச்சின் டெண்டுல்கர் எடுத்த 100-வது சதம் போல் மகா அறுவையான ஒரு சதம். பாகிஸ்தான் பந்து வீச்சு விராட் கோலிக்கு வங்கதேசம் எழுப்பிய சவால்களைக் கூட எழுப்பவில்லை என்பதும் ஆச்சரியம் கலந்த ஐயத்தையே ஏற்படுத்தியது. ரிஸ்வான் 151/2 என்ற சமயத்தில் அப்படி ஒரு பொறுப்பற்ற ஷாட் ஆடி பவுல்டு ஆகிறார். இவர் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 355 ரன்களைச் சேஸ் செய்தவர்.

கடைசியில் கோலி சதமெடுப்பாரா என்ற ஒரு போலி நாடகமே இந்தப் போட்டியின் உச்சக் கட்ட காட்சியாக இருந்தது. இந்திய வெற்றிக்கும் கோலியின் சதத்திற்கும் தேவை 12 ரன்கள். ரசிகர்களுக்கு ஒரே டென்ஷன் கோலியா? இந்தியாவா? என்ற போலிப்பிரச்சனையில் சிக்கிக் கொண்டனர். கடைசியில் அக்சர் படேல் ஒரு சுலபமான 2 ரன்களைத் தியாகம் செய்து கோலி சதம் எடுக்க வழி வகுத்தார். விராட் கோலி லெக் ஸ்பின்னர் அப்ரார் அகமதுவை சரியாக ஆடவில்லை, தடவினார். ஒரு முறை பவுல்டு கூட ஆகத்தெரிந்தார். மற்றபடி வேகப்பந்து வீச்சாளர்கள் கோலிக்குப் பிடித்தமான வேகத்தில் பிடித்தமான லெந்த்தில் வீசி நல்ல பெயர் வாங்கிக் கொண்டனர்.

பாகிஸ்தான் பேட் செய்த போது ஹர்திக் பாண்டியா, ரானா, குல்தீப் யாதவ்விற்கு பந்துகள் நின்று வந்து பாகிஸ்தானை முடக்கின, ஆனால் கோலி பேட் செய்த போது பந்துகள் நின்று வரவில்லை, பாகிஸ்தான் பவுலர்கள் வீசிய லெந்த் கோலிக்கு நல்ல வாகாக அமைந்தது. மற்றபடி பெரிய சதமெல்லாம் ஒன்றுமில்லை, இத்தனை வாய்ப்புகள் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் சதம் எடுக்கலாம், கோலி எடுக்க மாட்டாரா என்ன?

மொத்தத்தில் இந்தப் போட்டி ஒரு சரியான பிசுபிசுத்துப் போன சோர்வூட்டக்கூடிய போட்டியாக அமைந்தது. ரசிகர்களுக்குக் குஷிதான். 2 நோக்கங்கள் இதில் நிறைவேறியது, ஒன்று ‘பரமவைரி’ ஆன பாகிஸ்தானை வீழ்த்தியது, அதுவும் கோலி சதத்தின் மூலம் வீழ்த்தியது. ஆனால் கிரிக்கெட்டில் கொஞ்சம் கூடுதலாக நுணுக்கங்களையும் நுட்பங்களையும் கொண்ட பார்வையாளர்களுக்கு இந்தப் போட்டி செத்த போட்டி, கோலியின் சதம் சொத்தை சதமாகவே தெரியும்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article