ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக எளிதாக வெற்றி பெறும் தருவாயில் இருந்த போதும் இந்திய அணி ரசிகர்கள் கொஞ்சம் டென்ஷன் ஆகவே இருந்தார்கள். இதற்கு காரணம் ஸ்டார் வீரரான விராட் கோலி தன்னுடைய 51 வது சதத்தை பூர்த்தி செய்வாரா? மாட்டாரா என்பதுதான் டென்ஷனுக்கான காரணம்.
39 வது ஓவர் முடிவில் ஸ்ரேயாஸ் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது கடைசி பந்தில் ஹர்திக் களத்திற்கு வந்தார். இந்த சூழலில் இந்திய அணிக்கு 67 பந்துகளில் 28 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலை இருந்தது.

அப்போது விராட் கோலி 85 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இதனால் விராட் கோலி சதத்திற்கு 15 ரன்கள் தான் தேவைப்பட்டது. இந்த சூழலில் அணியின் வெற்றி உறுதி என்றால் ஒரு ஸ்டார் வீரர் சதத்தை நெருங்கும்போது மற்ற வீரர்கள் அவருக்கு தான் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கி அவருடைய சதத்தை பூர்த்தி செய்ய வழி ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.
ஆனால் ஹர்திக் பாண்டியா தாம் எதிர்கொண்ட முதல் ஓவரிலே ஒரு ரன் ஓடினார். இதனை அடுத்து மீண்டும் 40-வது ஓவரில் தொடக்கத்தில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்தார். அதில் முதல் பந்திலே ஒரு பவுண்டரி அடித்தார். இதனை அடுத்து இரண்டாவது பந்தில் ஒரு ரன் ஓடியா ஹர்திக் பாண்டியா நான்காவது பந்தில் சிங்கிள்ஸ் எடுத்தார். ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்க முயற்சி செய்தார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு தேவையான வெற்றி ரன்கள் குறைந்து கொண்டே இருந்தது. இதனால் கோலி சதம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதுதான் விராட் கோலி ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. விராட் கோலி சதத்தை நெருங்கும் பட்சத்தில், ஹர்திக் சுயநலத்துடன் பொறாமைப்பட்டு அவருடைய சதத்தை தடுக்க முயற்சி செய்ததாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால் நல்ல வேலையாக ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் எட்டு ரன்கள் அடித்தபோது நாற்பதாவது ஓவரில் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார். ஹர்திக் பாண்டியா மட்டும் இன்னும் ஒரு ஓவர் இருந்திருந்தால், வெற்றிக்கு தேவையான ரன்களை அவரே அடித்திருப்பார். இதன் மூலம் விராட் கோலி தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்திருக்க மாட்டார். ஆனால் அக்சர் பட்டேல், ஹர்திக் செய்த தவறை செய்யாமல் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக சிங்கிள்ஸ் எடுத்து கொடுத்தார். ஹர்திக் பாண்டியா இந்த செயல் மிகவும் மோசமானது என கோலி ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.