ARTICLE AD BOX
இந்தியாவில் உருவாகி 100+ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாருதி கார்.. அப்படி என்ன கார் இது..!
குஜராத்: இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனம் உற்பத்தி செய்யக்கூடிய மின்சார எஸ்யூவி வாகனம் ஜப்பான் உள்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. குறிப்பாக மின்சார கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய மின்சார கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் மாருதி சுசுகி நிறுவனம் அண்மையில் இ விட்டாரா (e Vitara) என்ற தங்களுடைய முதல் பேட்டரி அடிப்படையிலான மின்சார எஸ்யூவி வாகனத்தை அறிமுகம் செய்தது.
சர்வதேச சந்தைகளுக்கும் பொருந்தக்கூடிய தரத்தில் மாருதி சுசுகி நிறுவனம் இந்த காரை உருவாக்கி இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் மாருதி வாகன உற்பத்தி ஆலையில் இ விட்டாரா மின்சார கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இங்கே தயார் செய்யப்படக்கூடிய இந்த கார்கள் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
இந்தியாவில் தயார் செய்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய இரண்டாவது மாருதி எஸ்யூவி கார் என்ற பெருமை இவிட்டாராவுக்கு கிடைக்கிறது. ஏற்கனவே மாருதி நிறுவனம் தங்களுடைய ஃபிரான்க்ஸ் காரை இந்தியாவில் தயாரித்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்தது. நடப்பு ஆண்டிலேயே மாருதி நிறுவனம் தங்களுடைய குஜராத் ஆலையில் இவிட்டாரா கார்களின் உற்பத்தியை தொடங்குகிறது. உடனடியாக விற்பனையும் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் இருக்கும் மாருதி உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 7,50,000 கார்களை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டது. தற்போது அதில் மின்சார வாகன உற்பத்தி மையமும் இணைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டு காலத்திற்குள் இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்பதே தங்களுடைய இலக்கு என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி சுசுகி இ விட்டாரா வாகனத்தை பொருத்தவரை இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது. ஒன்று 49kWh திறன் கொண்டது மற்றொன்று 61kWh திறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இவை 500 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக சொல்லப்படுகிறது.
LED ஹெட் லேம்புகள், LED DRLகள், LED டெயில் லேம்புகள், 18-அங்குல ஏரோடைனமிக் அலாய் சக்கரங்கள், 7 ஏர் பேக்குகள் மற்றும் 60 சிறப்பு வசதிகளை கொண்டுள்ளது.இந்தியாவில் இந்த காரின் விலை 18 லட்சம் ரூபாயாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஹூண்டாயின் Creta Electric, மகேந்திராவின் BE 6, டாடாவின் Curvv ev மற்றும் MGயின் ZS EV ஆகிய கார்களுக்கு போட்டியாக இ விட்டாரா இருக்கும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika