ARTICLE AD BOX
மீண்டும் புத்துயிர் பெறும் ஜியோ.. 4 மாத உயர்வுக்குப் பிறகு வாடிக்கையாளர்களை இழந்து வரும் BSNL!
கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் பல பயனர்கள் அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்று சொல்லப்படும் BSNL ஆப்ரேட்டருக்கு மாறத் தொடங்கினர். இதனால் தொடர்ந்து BSNL-இன் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
4 மாதங்களாக தொடர்ந்து அதிக வாடிக்கையாளரை பெற்ற BSNL, நவம்பர் மாதம் 344,473 வாடிக்கையாளர்களை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற தொலைதொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும் குறைந்த ரீசார்ஜ் கட்டணங்களைக் கொண்ட BSNL, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட 7 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்தது.
சேவைகளின் தரம் பலவீனமடைதல் மற்றும் இந்தியா முழுவதும் 4ஜி சேவைகள் இல்லாத காரணத்தினால் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களை இழக்க தொடங்கியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் மாத இறுதியில் BSNL-இன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 92.05 மில்லியனாக இருந்தது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ 1.2 மில்லியன் பயனர்களை சேர்த்துள்ளது. பாரதி ஏர்டெல் 1.14 மில்லியன் பயனர்களை இழந்தது.
அதேபோல நவம்பர் மாதத்தில் வோடபோன் ஐடியா 1.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்தது. டிராய் தரவுகளின் படி ஒட்டுமொத்தமாக மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நவம்பரில் 1.76 மில்லியன் குறைந்து 1.148 பில்லியனாக உள்ளது. இதனால் ஜியோவின் சந்தை பங்கு 40.15 சதவீதமாகவும், ஏர்டெல் 33.45 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா 18.19 சதவீதமாகவும், பிஎஸ்என்எல் 8.03 சதவீதமாகவும் உள்ளது.
டிராய் வெளியிட்ட தரவுகளின்படி, செயலில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்களில் 92.3% ஆகும். நவம்பர் மாதத்தில், ஏர்டெல்லின் செயலில் உள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 3 மில்லியன் குறைந்து 380 மில்லியனாகவும், ஜியோவின் செயலில் உள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.12 மில்லியன் குறைந்து 447 மில்லியனாகவும் உள்ளது.
BSNL நிறுவனம் தற்போது தனது 4ஜி சேவைகளை மேம்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறது. இன்றெல்லாம் இணையம் என்பது மிகவும் பொதுவான ஒன்றாகிவிட்டது. டிஜிட்டல் பேமெண்ட் செலுத்துவது முதல் பிற விஷயங்கள் வரை அனைத்திற்கும் இணைய வசதி இன்றியமையாததாக உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.