ARTICLE AD BOX
இந்தியாவில் 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ்..
நொய்டா, டெல்லி: தைவான் நாட்டை சேர்ந்த டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூடுதலாக 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உலகில் 200 இடங்களில் உற்பத்தி ஆலை, ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்கள், விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறது. ஆப்பிள் மற்றும் டெஸ்லா நிறுவனங்களுக்கு தேவையான மின்சார உபகரணங்களை இந்த நிறுவனம்தான் தயாரித்து வழங்கி வருகிறது. இது தவிர மின்சார வாகனங்கள், சார்ஜர்கள் , கணினிகளுக்கான உபகரணங்களையும் தயாரிக்கிறது.

இந்த நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய தொழிலை விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கிரேட்டர் நொய்டா பகுதியில் நடைபெற்ற Elecrama 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பெஞ்சமின் லின் இந்தியாவில் 2003 ஆம் ஆண்டிலிருந்து தங்களுடைய நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது எனக் கூறினார்.
மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் இதற்காக 500 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை இந்தியா தங்களுடைய முக்கியமான சந்தை என அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் தொழில் மற்றும் எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமாக டெல்டா எலக்ட்ரானிக்ஸ் செயல்படும் என சுட்டிக்காட்டிய அவர் கிருஷ்ணகிரியில் அமைந்திருக்கும் தங்களுடைய ஆலையில் பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
கிருஷ்ணகிரி உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் கூடுதலாக 500 மில்லியன் டாலர்களை அதுக்காக ஒதுக்கீடு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சர்வதேச தரத்திலான மின்னணு சாதனங்களுக்கு தேவையான உபகரணங்களை தங்கள் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய போகிறது என்றார்.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கே மின்சார வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் வசதிக்கான உள்கட்ட அமைப்புகள் மற்றும் கன்வெர்ட்டர், ரெக்டிஃபையர்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறது.
டெல்டா நிறுவனம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாலையில் 2016 ஆம் ஆண்டிலிருந்து தங்களுடைய உற்பத்தி ஆலையை நிறுவி செயல்படுத்தி வருகிறது . அதேபோல உத்தராகண்ட் மாநிலம் ருத்ராபூரில் 2008 ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தி ஆலையை நிறுவி பல்வேறு உபகரணங்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. டெல்லி அருகே குருகுவானிலும் இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது.
Story written by: Devika