ARTICLE AD BOX
பெங்களூரு: சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் உறுப்பினர் நயனா மோட்டம்மா பேசும்போது, ‘மாநிலத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு ரூ.1 வரி செலுத்தினால், மாநிலத்துக்கு 15 பைசாவுக்கும் குறைவான வரிப் பங்குதான் வருகிறது. ஒன்றியத்தில் ஆளும் பாஜ தலைமையிலான ஆட்சி, அதிகம் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும். நாடு மற்றும் மக்கள் நலனுக்காக மாநிலத்தின் வரிப் பங்கை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று பாஜ குரல் எழுப்ப வேண்டும். கன்னடத்தின் வளர்ச்சிக்காக, கன்னட ஆதரவு நிகழ்ச்சிகளுக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு இந்தி திணிப்பை அதிக அளவில் செய்து வருகிறது. அதை நிறுத்த வேண்டும். மாநில மொழியை அழிக்கும் முயற்சி மேற்கொள்வதை நிறுத்த வேண்டும்’ என்றார்.
நயனா மோட்டம்மாவின் பேச்சுக்கு பாஜ உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திரசாமி பேசும்போது, ‘நயனா மோட்டம்மா முதல் முறையாக பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை பேச அனுமதியுங்கள்’ என்றார். அப்போது குறுக்கிட்ட பாஜ உறுப்பினர் உமாநாத் கோட்டியான், எத்தனை முறை வேண்டுமானால் வெற்றி பெற்று வரட்டும். பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றார்.
இதில் ஆத்திரமடைந்த நயனாமோட்டம்மா, பாஜ உறுப்பினர்களின் பேச்சுக்கு பதில் கொடுத்தார். உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஒன்றிய அரசு, மாநிலத்திற்கு வழங்க வேண்டிய வரி பங்கை சரியாக வழங்கியுள்ளதா? மாநிலத்தில் இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்குவாதம் நடந்தது. சபாநாயகர் யு.டி.காதர் தலையிட்டு சமாதானம் செய்தார்.
The post இந்தி திணிப்பு விவகாரம்; கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ்- பாஜ மோதல் appeared first on Dinakaran.