ARTICLE AD BOX
சென்னை மண்ணடியில் உள்ள இம்ப்ராஹிம் தெருவில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறனர். 4 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகிறனர். இவர்களின் பாதுகாப்புக்காக சிஆர்பிஎஃப் வீரர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர் கைது
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைசி டெல்லி விமான நிலையத்தில் சட்டவிரோத பணப்பறிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதின் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா
கடந்த 2022ஆம் ஆண்டு பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அப்போது பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டவிரோதன பணப்பறிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அரசியல் பிரிவாக எஸ்.டி.பி.ஐ கட்சி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் ரெய்டு
அமலாக்கத்துறை சோதனை சென்னை மட்டுமின்றி கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம், ஆந்திராவின் நந்தியால், ஜார்க்கண்டின் பாகூர், மகாராஷ்டிராவின் தானே, கர்நாடகாவின் பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைமை அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதாக அமலக்கத்துறை இயக்குநரகம் குற்றம்சாட்டி உள்ளது. சட்டவிரோத அமைப்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 2022 செப்டம்பரில் மத்திய அரசால் பிஎஃப்ஐ தடை செய்யப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
