ARTICLE AD BOX
அமராவதி,
ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தள்ளபுடி மண்டலத்திற்கு உட்பட்ட தடிபுடி பகுதியில், 11 மாணவர்கள் இன்று காலை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். குளித்து முடித்து விட்டு, கோவிலுக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டு இருந்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு அவர்கள் புனித நீராடுவதற்காக சென்ற இடத்தில் திடீரென ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.
அவரை காப்பாற்ற மற்றொருவர் சென்றார். அவரும் மூழ்கியுள்ளார். மொத்தம் 5 பேர் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். ஆற்றின் ஆழம் தெரியாமல் உள்ளே சென்றதில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது. எனினும், மற்ற 6 பேர் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்தனர்.
இதுபற்றி உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் போலீசார் மீட்பு பணியை மேற்கொண்டனர். இந்த முயற்சியில், தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் தீயணைப்பு வீரர்களும் இணைந்து கொண்டனர்.
இதில், 3 இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் துர்க பிரசாத், திருமலாஷேத்தி பவன் மற்றும் சாய் கிருஷ்ணா என அடையாளம் காணப்பட்டனர். இந்த தகவல் அறிந்து அவர்களுடைய குடும்பத்தினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். அவர்கள் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.
ஆகாஷ் மற்றும் அனிஷெட்டி பவனின் உடல்களை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தேவையான நிதியுதவியை கிடைக்க வழிவகை செய்யப்படும் என பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் எம்.பி. புரந்தேஸ்வரி உறுதியளித்து உள்ளார்.