ARTICLE AD BOX
பழையது பெருமையாக இருந்தாலும் சரி, சிறுமையாக இருந்தாலும் சரி விட்டு விடுங்கள். இன்றைக்கு எப்படி இருக்கிறீர்கள் அதை வைத்துத்தான் சமுதாயம் மதிக்கின்றது என்பதனால் இன்றைய வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
பழம் பெருமை பேசுவது வெட்டிக்கதை பேசுவதாகும். நேரம் வீணடிக்கப்படும். இதை மற்றவர்கள் விரும்பாதது மட்டுமின்றி வெறுக்கவும் செய்வர்.
ஒருவன் தற்பெருமை பேசினால் பரவாயில்லை. 'நான் கஷ்டப்பட்டு முன்னேறினேன். நீங்களும் முயன்றால் முன்னேறலாம்’ என்ற அறிவுரையாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் 'தாத்தா காலத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. இன்று ஒன்றுகூட இல்லை' என்ற இந்தச் செய்தியினால் எவ்விதப் பயனும் இல்லை.
நீங்கள் எப்படி முயன்றாலும் பழைய காலத்தில் வாழமுடியாது. இன்றைய நிகழ்காலத்தில்தான் வாழமுடியும். மறைந்த காலம் மறைந்ததுதான்.
'பழைய கால மகிழ்ச்சி, துக்கம் இவற்றை நினைத்து அசை போடலாம், அவ்வளவுதான். ஆனால் நிகழ்கால உணர்ச்சிகளாக அல்ல' என்கிறார் டாக்டர் காப்மேயர்.
வெற்றிகரமாகவும் புத்திசாலித்தனமாகவும் வாழ்வதற்கு கடந்த காலம் ஒரு பாடமாகும். அதையே நினைத்து நினைத்து புலம்பி காலத்தை வீணடித்தல் கூடாது. அது கடந்த காலம்; முடிந்துவிட்டது.
இன்றைய நாள் அதுவும் இப்பொழுது நம்முடைய நேரம் நல்லதாக இருக்கும். ஆம். இந்த நொடி நம் வசம் உள்ளது என பெருமையாக எண்ணி செயல்படுங்கள்.
பழையதை பழையதாக பாவியுங்கள். காலங்கடந்த நொடிகள் எப்போதும் திரும்பப் போவதில்லை. நமது ஒவ்வொரு நிமிடமும் மறைந்து கொண்டிருக்கின்றது. தமது உடலில் ஒவ்வொரு திமிடமும் முப்பது லட்சம் அணுக்கள் தேய்ந்து அழிந்து விடுவதாகவும், முப்பது லட்சம் புதிய உயிர் அணுக்கள் உற்பத்தியாவதாகவும் அறிவியல் வல்லுனர்கள் சொல்லுகின்றனர்.
நிமிடத்திற்கு நிமிடம் உங்கள் உடலில் புதிய செல்கள் உருவாகின்றன. அவற்றின் உறுதுணையோடு புதியவைகளைச் சிந்தித்து கடந்தவைகளுக்குக் கதவைச்சாத்துங்கள். எப்படி பழம்பெருமை பேசி பொன்னான நேரத்தை நாம் வீணடிக்கக் கூடாதோ அப்படியே எதிர்கால நிலைக்காக ஏக்கப்படவும் கூடாது.
வருவது வரட்டும். ஒருகை பார்த்துக் கொள்வோம் என்று துணிவுடன் செயல்படுங்கள். வருங்காலம் வறுமையைக் கொண்டுவந்து விடுமோ என்று அஞ்சி வாழ வேண்டியதில்லை.
நாளை வரும் துன்பம் கற்பனையானது சில முன்னேற் பாடுகளில் ஈடுபட்டால் அந்தத் துன்பங்களிலிருந்து விடுபடலாம். ஆனால் நாளை என்ன நடக்குமோ, எது நடக்குமோ என்று இன்றே கவலைப்பட்டு ஒரு மூலையில் உட்கார்ந்து புலம்புவதால் எந்தவிதப் பயனும் இல்லை.
ஆக்கபூர்வமான பணிகளில் ஊக்கமுடன் செயல்பட்டால் உங்கள் சிந்தனை நல்வழியைக் காட்டலாம்.
எதிர்காலத்தில் நீங்கள் இப்படி ஆகப்போகின்றீர்கள் என்பதற்காக உங்களை யாரும் இன்று மதிக்கப் போவதில்லை. இந்தச் சமுதாயம் இன்று நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதில்தான் கவனம் செலுத்தும்.
எனவே கடந்த கால கவலைகளையும், துன்பங்களையும் மறந்துவிடுங்கள். கடந்தவைகளுக்குக் கதவைச்சாத்தி, புதிய வாசலைத் திறந்து விடுங்கள்.