ARTICLE AD BOX
குவாலியர்,
மத்திய பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமி 2 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தில் ஜலாவன் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது இளைஞர் ஒருவரை சந்தித்திருக்கிறார். அவருடனான பேச்சு தொடர்ந்துள்ளது.
இதன்பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே 2 ஆண்டுகளாக நட்பு வளர்ந்திருக்கிறது. இந்நிலையில், சில காலம் வரை அவர்கள் பேசாமல் இருந்துள்ளனர். சமீபத்தில், அந்த சிறுமியை மொபைல் போன் வழியே தொடர்பு கொண்ட அந்த இளைஞர், ஜான்சி நகருக்கு வரும்படி கூறியுள்ளார்.
அப்படி வரவில்லையெனில், சிறுமியின் வீடியோ ஒன்றை வைரலாக்கி விடுவேன் என மிரட்டியிருக்கிறார். இதனால் ஜான்சிக்கு சென்ற அந்த சிறுமியை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். 5 நாட்களாக அறையில் அடைத்து வைத்து இந்த கொடுமை தொடர்ந்திருக்கிறது.
இதன்பின்பு, அவரிடம் இருந்து தப்பி வீடு திரும்பிய அந்த சிறுமி, நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி பெற்றோருடன் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு கிருஷ்ண லால் சந்தனி கூறியுள்ளார். இதுபற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.