ARTICLE AD BOX
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், திருச்சியில் அமைக்கப்படும் முதல்வர் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து சிங்காரத்தோப்பு அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்ததாவது:
முதல்வர் மருந்தகம் இந்த மாத இறுதிக்குள் துவக்கி வைக்கப்படும். இங்கு 186 தரமுள்ள மருந்துகள் விற்கப்படும். சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் விற்கப்படும். இதுவரை 300 தனி நபர்கள் லைசன்ஸ் பெற்றுள்ளார்கள். 440 கூட்டுறவு அமைப்புகள் லைசன்ஸ் பெற்றுள்ளன. மேலும் 402 பேர் லைசன்ஸ் பெற உள்ளனர். 898 கடைகள் தயார் நிலையில் உள்ளன. முதல் நாள் சென்னையில் துவக்கப்பட்டு மறுநாள் தமிழக முழுவதும் கடைகள் தயார் நிலையில் இருக்கும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 11.44 லட்சம் மெட்ரிக் டன் கூடுதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2,489 கோடி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் 1.4 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.3 லட்சம் கோடி கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நியாய விலைக் கடைகள் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். 25,000 கடைகள் புதுப்பிக்க வேண்டியுள்ளது. தற்பொழுது 17.4 லட்சம் புதிய கார்டுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் 1.5 லட்சம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 2.4 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளார்கள்.
தேர்தல் நேரத்தில்தான் அரிசி, பருப்பு பற்றாக்குறை இருந்தது அவை அனைத்தும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. அரிசி கடத்தல் தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கூட்டுறவு வங்கிகள் மூலம் இதுவரை 14,141 கோடி வேளாண் கடன், 15.69 லட்சம் விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது. 26 வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உற்பத்தி என்பது அதிகமாக உள்ளது. தற்போது கூடுதலான தொகை வழங்கப்பட்டு வருகிறது.
5.89 லட்சம் இறந்தவர்களுடைய ரேஷன் கார்டுகளை நீக்க வேண்டியுள்ளது. 26.69 லட்சம் இறந்தவர்கள் பொது கார்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
போலி ரேஷன் கார்டுகளை அகற்றுவதற்கு தனிக் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருள்களை தயவுசெய்து கடத்தாதீர்கள். அரிசி தேவை உள்ளவர்கள் வேண்டுமென்றால் வாங்கிக்கொள்ளுங்கள், வேண்டாம் என்றால் அரிசி வேண்டாம் என்று சொல்லி கார்டை மாற்றிக் கொண்டால் வேறு ஒருவருக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது நியாய விலைக் கடைகளில் தரமான அரிசி மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் மக்கள் பெரிதும் பயனடைந்து வருகிறார்கள். 2500 லிருந்து 3000 பேர் புதிதாக பணியில் சேர்க்கப்பட உள்ளனர். மாநிலம் முழுவதும் 2,600 காலிப் பணியிடங்கள் உள்ளன.
கூட்டுறவுத்துறை மூலமாக இரண்டு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று கூட்டுறவு மருந்தகம், மற்றொன்று அம்மா மருந்தகம் அது தொடர்ந்து செயல்படும். ஒரு புதிய முயற்சியாக ஜெனரிக் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது.
இந்த மருந்தகத்திற்காக மூன்று பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு, பொது மருந்துகள் 10% சதவீதம் விலை குறைவாகக் கிடைக்கும். இதன் மூலமாக பொதுமக்களுடைய மருந்துகளுக்கான செலவு மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றார்.
க.சண்முகவடிவேல்