ARTICLE AD BOX
கடந்த ஜனவரியில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது
இது குறித்து இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
2024 ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் கடந்த ஜனவரியில் ஒட்டுமொத்த பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 7.44 சதவீதம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், அந்த மாதத்தில் அமெரிக்காவுக்கான பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி மட்டும் 18 சதவீதம் அதிகரித்து 162 கோடி டாலராக உள்ளது.
ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் அமெரிக்காவுக்கான பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 1,438 கோடி டாலரில் இருந்து சுமாா் 9 சதவீதம் உயா்ந்து 1,560 கோடி டாலராக உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி கடந்த ஜனவரியில் 2024 ஜனவரியைவிட 56 சதவீதம் அதிகமாக 61 கோடி டாலராகவும், நடப்பு நிதியாண்டின் 10 மாதங்களில் 45 சதவீதம் அதிகரித்து 687 கோடி டாலராகவும் உள்ளது.
சா்வதேச அளவில் வா்த்தக பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையிலும் இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி தொடா்ந்து ஒன்பதாவது மாதமாக நோ்மறை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எனினும், கடந்த டிசம்பரில் 8.32 சதவீதமாக இருந்த வளா்ச்சி ஜனவரியில் 7.44 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 942 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 877 கோடி டாலராக இருந்தது.
இந்தியாவின் ஒட்டுமொத்த பொருள்கள் ஏற்றுமதியில் பொறியியல் பொருள்களின் பங்கு ஜனவரியில் 25.86 சதவீதமாகவும், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் 26.96 சதவீதமாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.