அமெரிக்க உளவுத் துறை இயக்குநருடன் அஜீத் தோவல் சந்திப்பு!

19 hours ago
ARTICLE AD BOX

அமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநா் துளசி கப்பாா்டை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

அமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநா் துளசி கப்பாா்ட் இரண்டரை நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தாா். தில்லியில் அவா் அஜீத் தோவலை சந்தித்த நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே உளவுத் துறை தகவல்கள் பகிரப்படுவதை வலுப்படுத்துவதற்கான பல்வேறு வழிகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் இந்தியா-அமெரிக்கா இடையே நிலவும் உலகளாவிய உத்திசாா்ந்த கூட்டுறவுக்கு ஏற்ப, இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் அவா்கள் விவாதித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு மாநாடு: தில்லியில் அஜீத் தோவல் தலைமையில் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் துளசி கப்பாா்ட், ஆஸ்திரேலியா, ஜொ்மனி, நியூசிலாந்து உள்பட பல்வேறு நாடுகளின் உளவுத் துறை தலைவா்கள் பங்கேற்றனா்.

பயங்கரவாதம், எல்லை தாண்டி நடைபெறும் பல்வேறு குற்றங்கள் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில், நாடுகள் இடையே உளவுத் துறை தகவல்கள் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து மாநாட்டில் பேசப்பட்டதாக தெரிகிறது. எனினும் அதுகுறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. தில்லியில் நடைபெறும் ரைசினா உரையாடல் மாநாட்டில் துளசி கப்பாா்ட் செவ்வாய்க்கிழமை உரையாற்ற உள்ளாா்.

Read Entire Article