ARTICLE AD BOX
சென்னை,
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், வி.சி.க., பா.ம.க. உள்பட சுமார் 53 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பா.ஜ.க., நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்த கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கைகள், போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தென் மாநிலங்களில் இருந்து எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய `கூட்டு நடவடிக்கை குழு' ஒன்றை அமைத்திட அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க. பங்கேற்காமல் தவிர்த்தது வரலாற்றுப் பிழை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கும் முயற்சி மிகவும் வரவேற்கத்தக்கது. அகில இந்திய அளவில் ஏற்கனவே இது விவாதிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க. முதலில் இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறது என்றாலும் கூட, தி.மு.க.வே கற்பனையாக இந்த கருத்தை முன்வைக்கவில்லை.
பா.ஜ.க.வினர் திட்டமிட்டு அரசியல் பேசுகிறார்கள். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை. ஆகவே, இந்த கூட்டத்தில் பா.ஜ.க. கலந்து கொள்ளாமல் தவிர்த்தது வரலாற்றுப் பிழை. அவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவித்திருக்க வேண்டும்.
இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தீர்மானங்களை முன்மொழிந்தார். அதை நாங்கள் வரவேற்று பேசியிருக்கிறோம். தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது. அவ்வாறு உயர்த்தினால் இந்தியா முழுவதும் ஒரே சதவிகிதத்தின் அடிப்படையில் உயர்த்தலாம் என்பதையே வி.சி.க.வின் கருத்தாக முன்வைத்திருக்கிறோம்."
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.