``அந்த நொடியில இருந்து கமல் சார் என் அண்ணன் ஆனார்'' - நெகிழும் 'வில்லிசை' பாரதி திருமகன்

3 hours ago
ARTICLE AD BOX

'சுனிதா வில்லியம்ஸ் போல ஸ்பேஸுக்குப் போகணும், நயன்தாரா போல கரியர்ல ஜெயிக்கணும், ஜெயலலிதா போல அரசியல் ஆளுமையா இருக்கணும்' என்று இந்தக்கால பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் இவர்களைப்போல, 1980-களில் குழந்தைப்பருவத்தில் இருந்த சிலருக்கு பொதிகை டிவியில் வந்த 'வில்லிசை பாரதி' முன்மாதிரியாக இருந்தார் என்று சொல்லலாம். தன்னுடைய அப்பா கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் வலப்பக்கமாக, பட்டுப்பாவாடை தாவணியில் அம்சமாக அமர்ந்துபடி சுருதிப்பெட்டியை இசைத்தபடி பாடிய பாரதி அக்கா போல தானும் பாட வேண்டும் என்கிற ஆசை அந்தக்காலப் பெண் குழந்தைகளுக்கு இருந்தது.

தற்போது, அரை நூற்றாண்டு கடந்து வில்லிசையில் கோலோசித்து வரும் பாரதி திருமகனிடம், அவருடைய சில நினைவலைகளைப் பகிரக் கேட்டோம். மகிழ்ச்சியாக பேச ஆரம்பித்தார்.
பாரதி திருமகன்

''என்னோட அப்பா கவிஞர் சுப்பு ஆறுமுகத்துக்கு பாரதின்னா உயிர். அதனாலதான் அம்மா வயித்துல நான் இருந்தப்போவே எனக்கு பாரதின்னு பேர் வெச்சார். ஏழு வயசுலேயே வில்லிசை மேடையில ஏறிட்டேன். 53 வருஷமா தொடர்ந்து வில்லிசையோட வாழ்ந்துக்கிட்டிருக்கேன். அப்பாவுக்கு நான் ஆமாம் போட்டேன். இப்போ என் கணவர் வில்லிசையில எனக்கு ஆமாம் போட்டுக்கிட்டிருக்கார்'' என்று நகை முகம் காட்டியவர், வில்லிசை பிறந்த செவி வழிக்கதையை நம்முடன் பகிர்ந்தார்.

''தென்பாண்டி நாட்டுல ஒரு ராஜா வேட்டைக்குப் போனாராம். வேட்டையாடி முடிச்சப்பிறகு 'அய்யோ இத்தனை மிருகங்களை வேட்டையாடிட்டோமே... ஆனா, நம்மால ஒரு மிருகத்துக்குக்கூட உயிர் கொடுக்க முடியாதேன்னு வருத்தப்பட்டாராம். இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம்னு மந்திரிகிட்ட கேட்டிருக்கார். 'தோள்ல கிடந்த வில்லை மடியில் சார்த்தி, தேன் கொண்டு வந்த குடத்தை வில்லோட கழுத்துல கட்டி, அம்பை வீசுகோலாக்கி தெய்வத்தையும் தேசத்தையும் பாடுங்கள் மன்னா'ன்னு சொன்னாராம் மந்திரி. மன்னர் பாட, கூட வேட்டைக்கு வந்தவங்க ஆமாம் போட்டாங்களாம்.

பாரதி திருமகன் வில்லிசையுடன்

சினிமாவை பொறுத்தவரைக்கும் கதை, வசனம், பாடல்கள், நகைச்சுவை, ட்ரீட்மென்ட் எழுதுறதுன்னு பல பங்களிப்புகள் செஞ்சிருக்கார் அப்பா. அந்தக்காலத்துல, சினிமா பாடல்கள்ல உடுமலை நாராயணக்கவி பாடல்களோட சில வரிகளை எழுதுவார். அப்பா சில வரிகள் எழுதுவார். கலைவாணர் என்.எஸ்.கே பாடின 'விஞ்ஞானத்தை வளர்க்க போறேன்டி'பாட்டுல ரெண்டு மூணு வரிகள் எங்கப்பா எழுதினது. அந்தக் காலத்துல யாரும் பேர், ராயல்டினு கேட்டதில்லை. நாகேஷூக்கு 60 படங்களுக்கும் மேல காமெடி டிராக் அப்பா எழுதினதுதான்.

சிவாஜி சாருக்கும் அப்பாவுக்கும் நல்ல நட்பு உண்டு. என்னோட கல்யாணம் முடிஞ்சதும், முதல் விருந்து சிவாஜி சார் வீட்ல தான் நடந்துச்சு. ஒருமுறை ஐயப்பன் சரித்திரம் வில்லுப்பாட்டை, சிவாஜி சாரோட ஃபேமிலி டாக்டர் வீட்ல நடத்தினோம்.

3 மணி நேரம் ஆடாம அசையாம உட்கார்ந்து கேட்டவர், 'எங்க தொழில்ல எந்தத் தப்பு செஞ்சாலும் கத்திரி வெச்சு வெட்டிப்போம். ஆனா, எங்கண்ணன் சுப்பு ஆறுமுகம் மேடையில எடிட் பண்ணிக்கிட்டு பாடுறாரு பாருங்க'ன்னு மனசு விட்டுப் பாராட்டினார்.

எங்களோட வில்லிசையைக் கேட்ட கலாம் ஐயா, சிரிப்பே தெரியாத ஒரு கூட்டம் இருக்கு. அவங்களுக்காக நீங்க வில்லுப்பாட்டு பாட முடியுமான்னு கேட்டார். 'நீங்க சொன்னா சரிங்கய்யா. எங்க பாடணும்'னு கேட்டோம். புழல் சிறைன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே கைதிகள் முன்னாடி இரண்டரை மணி நேரம் வில்லிசைக் கச்சேரி செஞ்சோம்'' என்கிற பாரதி திருமகன், தன்னுடைய உடன்பிறவா அண்ணன் என கமல்ஹாசன் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

உத்தம வில்லனில்...

''அப்பாவோட வில்லிசைக்கு கமல் அண்ணா நல்ல ரசிகர். 'உத்தம வில்லன்' படத்துல உத்தம வில்லன் கேரக்டரை அறிமுகப்படுத்துற பாட்டுல, அப்பாவோட வில்லுப்பாட்டு பங்களிப்பு வேணும்னு அண்ணா கேட்டிருந்தார். அதுதொடர்பா, முதல் தடவை கமல் சாரை பார்க்க போனப்போ (அப்போ சார்னுதான் பேசினேன்) அப்பாவை பெரியவரேன்னு பாசமா கூப்பிட்டார். அதுவொரு சிலிர்ப்பான தருணம்.

அன்னிக்கு வில்லிசையோட அடிப்படை பாடலை கமல் சார் ஸ்கிரிப்ட்டே இல்லாம பாடினது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. இவ்ளோ பிஸியான ஒருத்தர் எப்படி இத்தனை வரிகளை நினைவு வெச்சுக்க முடியும்னு அவர்கிட்டேயே கேட்டேன். அதுக்கு அவர், 'அவ்வை சண்முகம் பாசறையில இருந்தப்போ, வானொலியில நான் கேட்ட ஒரே பாட்டு நம்ம அப்பா பாட்டுதான்'னு சொன்னார். அந்த நொடியில இருந்து அவரை நான் அண்ணன்னுதான் குறிப்பிடுறேன்... கூப்பிடுறேன்.

கண்ணதாசன்: ``வீல் சேர்லயாவது அப்பா இந்தியாவுக்கு வந்துடுவார்னு நம்பினோம்... ஆனா..'' - கலங்கும் மகள்

'மக்கள் நீதி மய்ய'த்தின் மூன்றாவது மாநாடு திருச்சியில நடக்க இருந்தது. அந்த நேரத்துல அண்ணாவோட போன் கால். 'திருச்சி மாநாட்டுல அப்பா தான் என்னை வந்து வாழ்த்தணும்'னு சொன்னார். ஒரு நிமிஷம் அண்ணான்னு அப்பா கிட்ட கொடுத்தேன். அப்பாவும் சரின்னு ஒத்துக்கிட்டார். பல லட்சக்கணக்கான மக்கள் முன்னாடி, 'மக்கள் நீதி மய்யம் மணிக்கொடி வாழியவே'ன்னு ரெண்டு மணி நேரம் எங்க குழுவினரோட வில்லுப்பாட்டு நடந்துச்சு.

``மோடி எங்கள் பெயர்களைக் குறிப்பிடாததில் வருத்தமில்லை'' - வில்லிசைக் கலைஞர் பாரதி திருமகன்!

உத்தம வில்லன் தொடர்பா நாங்க பேசிக்கிட்டிருக்கிறப்போவே, என் மகன்கிட்ட 'உங்க தாத்தாபற்றி ஓர் ஆவணப்படம் எடுங்க'ன்னு அண்ணன் சொன்னார். அதே மாதிரி அப்பாவோட 92-வது வயசுல 'வில்லிசை தந்தை'ன்னு ஓர் ஆவணப்படம் எடுத்தோம். அப்பாவோட ஆவணப்படத்துல உங்களோட வாழ்த்து கட்டாயம் இடம்பெறணும் அண்ணான்னு கேட்டேன். அண்ணாவும் அதை செஞ்சிக் கொடுத்தார். அதுக்கு நான் ஒரு நன்றி மெசெஜ் அனுப்பி வெச்சேன். அதுக்கு அவர் என்ன ரிப்ளை செஞ்சார் தெரியுமா? 'தங்கையே... ஒரு குடும்பத்தாருக்குள் நன்றி ஏது, இது என் கடமை' என்று மெசேஜ் அனுப்பினார். என் வாழ்க்கையோட பொக்கிஷ தருணம்னே அதை சொல்லலாம்'' என்கிறார் பாரதி திருமகன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY

Read Entire Article