அதிகபிரசங்கித்தனம்… வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு ஸ்டாலின் பரிந்துரை

10 hours ago
ARTICLE AD BOX

பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 4வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டசபை உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனின் செயல்பாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று பதில் அளித்தார்.

Advertisment
Advertisements

அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மாநில அரசு நடத்தக் கூடாது என்று எந்த சுப்ரீம் கோர்ட்டும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் இடஒதுக்கீடு தொடர்பான சில கருத்துகளை முன்வைத்தார். மேலும், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் குறித்தும் பேசினார். அவரது கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனால் கோபமான வேல்முருகன் இருந்த இடத்தைவிட்டு எழுந்து அமைச்சர்களை நோக்கி கைகளை நீட்டி பேசினார்.

தொடர்ந்து, சபாநாயகர் இருக்கை முன்பு சென்று பேசுவதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டதோடு, சபாநாயகருக்கு எதிராக தொடர்ந்து கோஷம் எழுப்பினார். அப்போது சபாநாயகர் அப்பாவு அமைதியாக இருக்குமாறு கூறிய போதும், வேல்முருகன் தொடர்ந்து கோஷம் எழுப்பி கொண்டே இருந்தார்.

இதனால் கோபமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் அதிகபிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார். இது வேதனை அளிப்பதாக இருக்கிறது. அவை மாண்பை மீறி வேல்முருகன் நடந்து கொள்ளக் கூடாது. இருக்கையை விட்டு வந்து மாண்பை குறைத்து பேசுவது ஏற்புடையதல்ல. இதனால் வேல்முருகன் மீது சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் தன்னை திருத்திக்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை அமைய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "சட்டசபை உறுப்பினர் வேல்முருகனுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இனி இப்படி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, சட்டசபையில் இருந்து வெளியேறிய வேல்முருகன் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய வேல்முருகன், "நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. முதல்வர் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டது வருத்தம் அளிக்கிறது. நான் தகராறு செய்யவில்லை, வன்முறையிலும் ஈடுபடவில்லை.

அ.தி.மு.க.,வில் இருந்து வந்த அமைச்சர் சேகர்பாபு அ.தி.மு.க.,வை காப்பாற்ற என் மீது குற்றம்சாட்டினார். சபாநாயகர் இருக்கையின் முன்பு நின்று பேச அனுமதி கொடுங்கள் என கேட்டது தவறா? பேசுவதற்கு அனுமதி கேட்ட என்னை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசினார். அமைச்சர் சேகர்பாபு தவறான தகவலை, முதலமைச்சருக்கு சொல்லி உள்ளார்; அதனை அப்படியே முதலமைச்சர் தெரிவித்தது வருத்தம் அளிக்கிறது. சேகர்பாபு அ.தி.மு.க.,வை காப்பாற்றுவதற்காக என்னை விமர்சனம் செய்கிறார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.

 

Read Entire Article