ARTICLE AD BOX
புதுடெல்லி: அதானி மீதான ஊழல் புகார் குறித்து இந்தியாவின் உதவியை நாடியிருப்பதாக அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (எஸ்இசி) அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தி ஒப்பந்தத்தை பெறுவதற்காக அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவில் முதலீடுகளை பெற்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் நியூயார்க் மாவட்ட நீதிமன்ற நீதிபதி நிக்கோலஸ் கராபிசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘கவுதம் அதானி மற்றும் சாகர் இருவரும் இந்தியாவில் இருப்பதால் அங்கு அவர்களிடம் விசாரணையை தொடர இந்திய சட்டம் மற்றும் நீதித்துறை அதிகாரியிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘அதானி விவகாரம் தனிப்பட்ட நிறுவனத்தின் விவகாரம் என மோதானி ஏற்கனவே கைவிரித்து விட்டது. இப்போது அவர்கள் அமெரிக்க எஸ்இசிக்கு உதவி செய்வார்களா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
The post அதானி மீதான ஊழல் புகார்; இந்தியாவின் உதவியை கேட்கிறது அமெரிக்கா: மோடி செய்வாரா? காங். கேள்வி appeared first on Dinakaran.