ARTICLE AD BOX
அண்ணா பல்கலை. வளாக பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன? எஃப்.ஐ.ஆர் லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனை பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.
உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ என சந்தேகம் எழுகிறது.
யார் அந்த சார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற , முறையான சி.பி.ஐ விசாரணையே நீதியை வெளிக்கொணரும்!
யார் அந்த சார் என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.