ARTICLE AD BOX
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர், பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. இதில் காஸாவில் கடந்த 16 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். அவர்கள் வேறு இடத்தில் குடியேறிய பிறகு, போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவை அமெரிக்கா கைப்பற்றும். அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் அமெரிக்க ராணுவம் ஈடுபடுத்தப்படும். போரினால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியை அமெரிக்காவே சொந்தமாக்கி, அப்பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்பு, வீட்டுவசதி உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செய்யும்” எனத் தெரிவித்திருந்தார். அவருடைய இந்தக் கருத்துக்கு மத்திய கிழக்கு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், எதிர்காலத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டில் காஸா எப்படி இருக்கும் என்பதைப் போன்ற சித்திரிக்கப்பட்ட ஏஐ வீடியோ ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். அதில், காஸா நகரத்தின் மையத்தில் டொனால்டு ட்ரம்ப்புக்கு தங்க நிறத்தில் ஆளுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அமைதியான கடற்கரையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ட்ரம்ப் மது அருந்துவது போன்ற காட்சிகளும் எலான் மஸ்க் நடைப்பயணம் செல்வது போன்ற காட்சிகளும் குழந்தைகளுக்கு பணத்தை வாரி இறைப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அதோடு மட்டுமின்றி கேளிக்கை விடுதியில் பெண்களுடன் ட்ரம்ப் நடனமாடுவது, குழந்தைகள் சுதந்திரமாக ட்ரம்ப் முகம் பொறித்த பலூன்களை வைத்து விளையாடுவது, கடைகள் முழுக்க ட்ரம்ப்பின் சிறிய உருவச் சிலைகள் விற்பனை, கடற்கரையில் உணவு உட்கொள்வது, சாலைகளில் சொகுசு கார்கள், நட்சத்திர விடுதிகள் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பதுங்குக் குழிகள், துப்பாக்கிகள், வெடிக்காத குண்டுகள் ஆகியன அகற்றப்பட்ட முற்றிலும் புதிய பூமியாக மாற்றப்பட்டிருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.