ARTICLE AD BOX
கவுகாத்தி: அசாமின் நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கிய 5 தொழிலாளர்களின் சிதைந்த உடல்கள் 44 நாட்களுக்கு பின் நேற்று மீட்கப்பட்டது. அசாமில் திமா ஹசாவோவில் உள்ள நிலக்கரி சுரங்கத்திற்குள் கடந்த மாதம் 6ம் தேதி திடீரென வெள்ளநீர் புகுந்தது. அங்கிருந்த தொழிலாளர்களில் பலர் தப்பி மேலே வந்த நிலையில் 9 தொழிலாளர்கள் மட்டும் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். இதனை தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இரண்டு நாட்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. பின்னர் 11ம் தேதி மேலும் மூன்று தொழிலாளர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மீதமுள்ள தொழிலாளர்களின் சடலங்களை தேடும் பணியில் தொடர்ந்து மீட்பு குழுவினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சுமார் 44 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மாலை 3 பேரின் சிதைந்த சடலங்கள் மீட்கப்பட்டது. நேற்று அதிகாலை மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்டுள்ள சடலங்கள் முற்றிலும் சிதைந்து இருப்பதால் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சுரங்கத்திற்குள் சிக்கிய 9 தொழிலாளர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post அசாம் சுரங்கத்தில் 44 நாட்களுக்கு பின் 5 சடலங்கள் மீட்பு appeared first on Dinakaran.