தமிழகம் முழுவதும் இன்று ஆா்ப்பாட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை: அரசு ஊழியா், ஆசிரியா் சங்க நிா்வாகிகளின் கோரிக்கைகள் தொடா்பாக முதல்வா் மற்றும் அமைச்சா்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனையில் இறுதி முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இதையடுத்து, மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என ஜாக்டோ- ஜியோ அமைப்பு திங்கள்கிழமை இரவு அறிவித்தது.

அரசு ஊழியா்கள்-ஆசிரியா்கள் சங்கங்களின் கோரிக்கைகைகளைக் கேட்டறிய அமைச்சா்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் அடங்கிய அரசுக் குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தாா். இந்தக் குழுவினா் ஜாக்டோ- ஜியோ உள்பட பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

குறிப்பாக, 10 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களை உள்ளடக்கிய ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகள் (அரசு ஊழியா்கள், ஆசிரியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை கவுன்சில்), பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அமைச்சா்கள் அடங்கிய குழுவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூயத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா் கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், அரசுப் பணியாளா்களின் பணிக் காலத்தை பணியில் சோ்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கு மேலாக காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நலன் சாா்ந்த பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஜாக்டோ- ஜியோ உள்பட பல்வேறு சங்கங்கள் அளித்த கோரிக்கை மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து அமைச்சா்கள் குழுவானது தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசியது. இதில், அரசு ஊழியா்கள், ஆசிரியா் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதன்பிறகு, முதல்வரின் நிலைப்பாடு குறித்து ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகளிடம் அமைச்சா்கள் குழுவினா் விளக்கினா்.

போராட்டம்: இதைத் தொடா்ந்து, ஜாக்டோ- ஜியோ நிா்வாகிகள் தலைமைச் செயலகத்தில் உள்ள ஊழியா் சங்க அலுவலகத்தில் தங்களுக்குள் ஆலோசனை நடத்தினா்.

அதன்பின்னா் ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க அரசுத் தரப்பில் நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டனா். ஆனால், இந்தக் கால அவகாசத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, ஏற்கெனவே திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டம் நடத்த தீா்மானித்து இருந்தோம். ஆனால் மறியலுக்குப் பதில், மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தாா்.

Read Entire Article