தமிழகத்தில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

3 hours ago
ARTICLE AD BOX

Published : 25 Feb 2025 06:04 AM
Last Updated : 25 Feb 2025 06:04 AM

தமிழகத்தில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

<?php // } ?>

சென்னை: பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை வழங்கும் வகையில் கூட்டுறவு துறை சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுபோன்ற திட்டங்களால் வளமான, நலமான தமிழகம் உருவாகும் என்று உறுதிபட தெரிவித்தார்.

தமிழக கூட்டுறவு துறை சார்பில் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக 1,000 முதல்வர் மருந்தங்களை திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:

கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இரு கண்கள். கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை வளர்த்தெடுக்கவும், சிறந்த மருத்துவ கட்டமைப்பை உருவாக்கி, அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதிசெய்யவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, ஜெனரிக் உள்ளிட்ட மருந்துகளை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கும் வகையில், முதல் கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்தேன்.

நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ச்சியாக அதிக அளவில் மருந்துகள் வாங்க வேண்டி இருப்பதால், சாதாரண, சாமானிய மக்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. அவர்களுக்கு இது பெரும் பொருளாதார சுமையாக மாறுகிறது. அந்த சுமையை குறைக்கும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. மருந்தகங்களை சிறப்பாக செயல்படுத்த, மருந்தாளுநர்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு, மானியம் மற்றும் தேவையான கடனுதவியை அரசு வழங்கியுள்ளது.

மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள பி.பார்ம், டி.பார்ம் முடித்தவர்கள் அல்லது அவர்கள் ஒப்புதல் பெற்ற தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2 லட்சமும், தொழில் முனைவோருக்கு ரூ.3 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கம், மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு சிறப்பாக பணியாற்ற, மருந்தாளுநர், தொழில் முனைவோருக்கு 3 கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பி.பார்ம், டி.பார்ம் படித்த 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் சென்னை சாலிகிராமத்தில் தலைமை மருந்து கிடங்கும், 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட மருந்து கிடங்குகளில் ஏசி, குளிர்சாதன பெட்டி, கணினி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மருந்து தேவை பட்டியல் பெறப்பட்ட 48 மணி நேரத்தில், மருந்துகளை வாகனம் மூலம் மருந்தகத்துக்கு அனுப்பிவைக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கிடங்குகளில் 3 மாதத்துக்கு தேவையான மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்படுகிறது.

முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கான மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகத்தில் பெற முடியும்.

குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று ஒவ்வொரு தரப்பினரின் தேவையையும் உணர்ந்து, திட்டங்களை செயல்படுத்துவதால், சமூக வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாக வளர்ந்து கம்பீரமாக நிற்கிறது. வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், குறைந்த விலையில் தூய்மையான குடிநீர், வேலைவாய்ப்பு, பொருளாதார குறியீடு, தொழில் உள்கட்டமைப்பு, சம வாய்ப்புகள், அமைதி, மருத்துவம், மக்கள் நல்வாழ்வு, நுகர்வு உற்பத்தி என எல்லா குறியீடுகளிலும் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய அரசின் நிதி ஆயோக் புள்ளிவிவரங்களே சொல்கின்றன. பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு இடையில்தான் கலைஞர் மகளிர் உரிமை, விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், காலை உணவு என்று முற்போக்கான, தொலைநோக்கான, நாட்டுக்கே முன்னோடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

தற்போது முதல்கட்டமாக, 1,000 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த கட்டங்களில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைப்பது, பி.பார்ம், டி.பார்ம் படித்த இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க அடித்தளம் அமைப்பது போன்றவைதான் இத்திட்டத்தின் நோக்கம். அந்த நோக்கம் கொஞ்சம்கூட சிதையாமல் அதிகாரிகள் இன்னும் சிறப்பாக இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இளைஞர்களின் திறன் வளர்க்கும் இந்த அரசு, இதுபோன்ற திட்டங்களால் இளைஞர்களை தொழில் முனைவோராக்கி வருகிறது. நாம் உருவாக்கும் வாய்ப்புகளால் இளைஞர்கள் உயர்வார்கள். நமது திட்டங்களால் வளமான, நலமான தமிழகம் நிச்சயம் உருவாகும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், மருந்தகங்கள் அமைப்பவர்களுக்கு அதற்கான மானியங்களை முதல்வர் வழங்கினார். அமைச்சர்கள் பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், கூட்டுறவு துறை செயலர் சத்யபிரத சாஹு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, சென்னை தியாகராய நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார்.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article