ARTICLE AD BOX
*கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கணவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால், மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதனிடையே மனு அளிக்க வந்த பெண் ஒருவர் திடீரென்று ஆட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் தான் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடனே பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். தொடர்ந்து விசாரணையில், விழுப்புரம் அருகே தாண்டவமூர்த்திகுப்பத்தை சேர்ந்த குமாரவேல் மனைவி சுதா (34) என்பது தெரியவந்தது.
தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், ‘எங்களுக்கு கடந்த 20022ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கேண்டீனில் வேலை செய்து வந்தார். இந்த மருத்துவமனைக்கு குறிஞ்சிப்பாடியை சேர்ந்த இளம்பெண் பிரசவத்துக்காக வந்துள்ளார்.
அவருடன் எனது கணவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு என்னுடன் சரிவர பேசாமல் என்னையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு அந்த பெண்ணுடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருகிறார். இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் விசாரணை செய்யாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
இதனால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். பின்னர் போலீசார் இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி மனு அளிக்குமாறு தெரிவித்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் சுதா மனு அளித்துவிட்டு சென்றார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கள்ளக்காதலியுடன் கணவர் தனிக்குடித்தனம் மனைவி பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.