ARTICLE AD BOX
வெங்காயப் பக்கோடா செய்ய பாதி வெங்காயத்தையும், இஞ்சியையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து அந்த விழுதை மாவில் கலந்து செய்தால் பக்கோடா "கமகம" வென்று வரும்.
முற்றிய வெண்டைக்காய்களை தூக்கி எறியாமல், சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்த புளித்த மோரில் போட்டு மூன்று நாட்களுக்கு ஊறவைத்து பின்னர் வெயிலில் நன்கு காயவைக்கவும். தேவையானபோது எண்ணையில் பொரித்தெடுத்து சாப்பிடலாம்.
முளைக்கீரையை உப்பு போட்டு வேகவைத்து, தேங்காய், பச்சை மிளகாய் அரைத்துக் கலந்து, இரண்டு கரண்டி புளிக்காத தயிர்விட்டு, கடுகு தாளித்தால் கீரைப்பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்.
கொழுக்கட்டைக்கு நீர் கொதிக்கும்போது இரண்டு டீஸ்பூன் காய்ச்சிய பால் விட, கொழுக்கட்டை வெள்ளை வெளேரென்று இருக்கும்.
சாம்பார் ஹோட்டல் சாம்பார்போல மணக்க, அடுப்பிலிருந்து இறக்கும் முன்பு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் கொஞ்சம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு பல் பூண்டு நசுக்கி, லேசாக எண்ணெயில் வதக்கி சாம்பாரில் கொட்டி ஒரு கொதியில் இறக்குங்கள்.
எண்ணெய் நிறைய விட்டு ஃப்ரை செய்யும் காய்கறிகளுக்கு அதாவது வெண்டைக்காய் உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவற்றுக்கு மூன்று சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்து வதக்கினால் எண்ணையின் அளவு குறையும். ஆனால் எண்ணெய் நிறைய விட்டுச் செய்தது போல் இருக்கும்.
மணத்தக்காளி வற்றல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப்போட்டால் வற்றல் குழம்பின் ருசியே அலாதிதான்.
புலாவ், பிரியாணி போன்றவை பொலபொலவென வரவேண்டும் என்றால், புலாவ் அரிசியை கொதிக்கும் வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்துவிட்டு பின் புலாவ் செய்ய குழையாமல் பொலபொலவென வரும்.
வாழைத்தண்டை நார் இல்லாமல் நறுக்கி, லேசாக எண்ணையில் வதக்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, நாலு மிளகாய் வற்றல் ஆகியவற்றையும் எண்ணையில் வறுத்து, தேவையான அளவு உப்பு, பூண்டு சேர்த்து சட்னியாக அரைக்கலாம். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பாகற்காய் பொரியல் செய்யும்பொழுது, முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு கீரையைப் பொடியாக நறுக்கி, பாகற்காயுடன் சேர்த்து வதக்குங்கள். இந்தப் பொரியல் சிறிது கூட கசக்காது. கீரையும், பாகற்காயும் சேர்ந்து நல்ல மணமாகவும் இருக்கும்.
சூப், கிரேவி போன்றவற்றில் போடுவதற்கு க்ரீம் கைவசம் இல்லையா? சிறிது வெண்ணையில் சிறிது பாலைக்கலந்து நன்கு கலக்கிய பின் இதையே க்ரீமுக்குப்பதிலாக உபயோகிக்கலாம். வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாது.
காலையில் வைத்த சாம்பாரை மீண்டும் இரவில் இட்லி, தோசை போன்றவற்றுக்குத் தொட்டுக்க கொள்ள உபயோகப்படுத்தும்பொழுது சிறிது வெந்தயத்தையும், ஒரு டீஸ்பூன் கொத்துமல்லி விதையையும் வறுத்துப் பொடி செய்து போட்டால் சாம்பார் நல்ல வாசனையாகவும், ருசியாகவும் இருக்கும்.