ARTICLE AD BOX
Y – பிரிவு பாதுகாப்பு வழங்குவது குறித்து விஜயுடன் சிஆர்பிஎஃப் மத்திய உளவுத் துறை, செக்யூரிட்டி பிரான்ஞ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது விஜயின் நீலாங்கரை வீட்டில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் அதிகாரிகள் உட்பட 8 பேர் பங்கேற்றனர்.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களம் காண உள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அவரது கடைசி படத்தின் படப்பிடிப்பில் இருந்து வரும் விஜய் அவ்வப்போது அரசியல் ரீதியான முக்கிய நிகழ்வுகளிலும், அவரது கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில், உளவுத்துறையினர் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்க கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று 12 மணியளவில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் அதிகாரிகள் 4 பேர் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு வந்தனர். அவர்களை தொடர்ந்து மத்திய உளவுத் துறை (IB) அதிகாரிகள் இருவர், தமிழக காவல் துறையின் செக்யூரிட்டி பிரான்ஞ் அதிகாரி ஒருவர், நீலாங்கரை சரக உதவி ஆணையர் பரத் ஆகிய 8 அதிகாரிகள் விஜய் வீட்டிற்கு வந்தனர். முன்னதாக விஜய் பயன்படுத்தும் அனைத்து வாகனங்களும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக்குப் பிறகு, விஜய் வீட்டிற்கு அருகில் உள்ள (விஜய் வீட்டில் இருந்து 2-வது பில்டிங்) அவரது அலுவலகத்திற்கு வந்து சிஆர்பிஎப் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியின் “தி ரூட் ” எனும் சினிமா தயாரிப்பு நிறுவனம் இங்கு செயல்பட்டு வரும் நிலையில், இந்த அலுவலகத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் தங்கிக் கொள்ள முகாம் அலுவலகம் செயல்பட இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் வீட்டுக்கு அருகிலேயே உள்ள இந்த அலுவலகத்தில் “Y” – பிரிவின் சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கிக் கொள்வார்கள் எனவும், இங்கிருந்த படி விஜய் செல்லும் இடங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் “Y” பிரிவு பாதுகாப்பு விஜய்க்கு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் விஜய்க்கு 8 மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு அளிக்கும் வகையில் Y – பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. எட்டு பேரில் மூன்று பேர் துப்பாக்கி ஏந்திய காவலர்களாக இடம் பெறுவார்கள் எனவும், அவர்களில் ஒருவர் அல்லது இருவர் கமாண்டோ பிரிவினரை சேர்ந்தவர்களாகவும் அவரது தனி பாதுகாவலராகவும் செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் 2025 : இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடிய மகளிர் குழு