TN Global City Details: தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சென்னைக்கு அருகிலான புதிய நகரம், எங்கே அமைய உள்ளது என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

2000 ஏக்கரில் புதிய நகரம்:

நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னைக்கு அருகில், 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உரையில், ”நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள், தற்போதுள்ள நகரங்களை ஸ்போ-ரேடிக் முறையில் விரிவாக்குவதற்குப் பதிலாக புதிய ஒருங்கிணைந்த நகரங்களை உருவாக்க பரிந்துரைக்கின்றனர். அதனடிப்படையில் டிட்கோ திட்டத்தின் முதல் கட்டத்தை நிறைவேற்றும், இருப்பினும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என குறிப்பிட்டு இருந்தார்.

என்னென்ன வசதிகள் இருக்கும்?

புதிய நகரத்தில் ஐடி பூங்காக்கள், ஃபின்டெக் வர்த்தக மண்டலங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், வர்த்தக மையங்கள் மற்றும் மாநாட்டு அரங்குகள் அமைக்கப்படும். பொது மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுகாதார மையங்கள் இடம்பெறும். கூடுதலாக, பல அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள், பல்வேறு வருவாய் பிரிவினர், சாலை வலையமைப்புகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை எரிசக்தி அமைப்புகள், இணை வேலை செய்யும் இடங்கள், நகர்ப்புற சதுரங்கள் மற்றும் பூங்காக்கள் ஆகியவை மேம்படுத்தப்படும். சென்னையுடன் தடையற்ற தொடர்பை உறுதி செய்வதற்காக மெட்ரோ வசதி, விரைவு பேருந்து சேவைகள் மற்றும் முறையான சாலை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

வல்லுநர்கள் எச்சரிக்கை:

புதிய நகரங்களை உருவாக்குவது என்பது நிர்வாக செயல்பாடுகளுக்காக என்பதை விட வேலைவாய்ப்பை உருவாக்க வணிக அல்லது தொழில்துறை நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும் என வல்லுநர்கள் கணிக்கின்றன்ர். போட்டித்தன்மையை அதிகரிக்க இது கவனமாக திட்டமிடப்பட்டு, சென்னைக்கு அருகில் இருக்க வேண்டும். சமூக உள்கட்டமைப்பும் அவசியம், இல்லையெனில், புதிய நகரத்தை உருவாக்கும் நோக்கம் தோற்கடிக்கப்படும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னையில் நிலவும் பிரச்னைகள்:

சில வல்லுநர்கள் சென்னைக்கு அருகில் நகரத்தை உருவாக்குவதை எதிர்க்கிறார்கள். சென்னை ஏற்கனவே பெரிதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட கடுமையான வழக்குகளை சென்னை எதிர்கொள்கிறது என கவலை தெரிவிக்கின்றனர். வீட்டுப் பற்றாக்குறை, சுகாதாரமற்ற நிலைமைகள், கண்மூடித்தனமான விவசாய நிலங்களை மாற்றுதல், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் அதிகரித்து வரும் குற்றங்கள் சென்னையில் முக்கிய பிரச்னையாக உள்ளது.

எங்கே அமைகிறது புதிய நகரம்?

பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை இடையே தான், புதிய நகரத்திற்கான கடும்போட்டி நிலவுகிறது. அதேநேரம், அரசு முன்மொழிந்துள்ள இந்த திட்டத்திற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுபக்கம் எதிர்ப்பும் எழுந்துள்ளது. தொழிற்சாலைகளின் அடிப்படையில் இரண்டாம்கட்ட நகரங்களின் அருகில் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மறுபுறம், புதியதாக விமான நிலையம் அமைக்கப்பட உள்ள பரந்தூரிலும், புதிய நகரம் அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மாற்று வாய்ப்பு?

புதிய நகரம் இரண்டாம் நிலை நகரங்களுக்கு அருகில் அமைய வேண்டும் என்றும் சில வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் அல்லது திருநெல்வேலி போன்றவை மற்ற வாய்ப்புகளாகும். புதிதாகத் தொடங்குவதற்குப் பதிலாக ஏற்கனவே இருக்கும் நகரத்தை மேம்படுத்துவது நல்ல வாய்ப்பாக இருக்கும் என வலியுறுத்தப்படுகிறது.

எகிறப்போகும் விலை..!

புதிய நகரம் உருவாக்கப்பட உள்ள இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படுவதில்லை. அதேநேரம், அந்த இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு அங்குள்ள இடங்களில் விலை கிடுகிடுவென பலமடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனை காரணமாக மதுரையில் நிலங்களின் விலை உயர்ந்துள்ளது. அதேபாணியில் தற்போது சென்னைக்கு அருகே அமையவுள்ள புதிய நகரத்தை சுற்றியுள்ள இடங்களின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.