ARTICLE AD BOX
டாஸ்மாக் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தி முடித்திருக்கும் நிலையில், ‘ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக,’ அது தொடர்பான செய்தி குறிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அடுத்தது என்ன? என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ‘டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனை தொடர்பாக, மாநில அரசின் அனுமதி இல்லாமல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், விசாரணை என்கிற பெயரில் டாஸ்மாக் ஊழியர்கள், அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது’ என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு விசாரணைக்கு வரும் நாளில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம். இந்நிலையில், டாஸ்மாக் முறைகேடு குறித்து பாஜக சார்பில் இன்று தீவிர பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளில், முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாற்றி, அரசுக்கு எதிராகவும், திமுகவுக்கும் எதிராகவும் பெரிய அளவிலான பிரசாரத்தை பாஜக கையில் எடுத்தது.
வரும் நாட்களிலும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தை பெரிய அளவில் கையில் எடுக்க தமிழக பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் நேற்று மாலை, அமைச்சர் செந்தில் பாலாஜி அவசரமாக டெல்லி சென்று, இன்று காலை சென்னை திரும்பியிருந்தார். அந்த பயணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
செய்தி குறிப்பு வெளியிட்டதோடு, அமலாக்கத்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஒருபுறம் பாஜகவின் போராட்டம், மற்றொரு புறம் டாஸ்மாக் நிர்வாகத்தின் சட்ட நடவடிக்கை, மற்றொரு புறம் அமலாக்கத்துறையின் அடுத்த நிலை என்ன? என்கிற முக்கோண எதிர்பார்ப்பில் டாஸ்மாக் முறைகேடு விவகாரம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
