ARTICLE AD BOX
பன்னீரை வெச்சு ஒருமுறை இந்த பக்குவத்தில் கிரேவி செய்யுங்க... சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
Methi Paneer Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீரை செய்வீர்களா? அதுவும் ஒரே சுவையில் தான் பன்னீரை செய்வீர்களா?அப்படியானால் அடுத்த முறை ஹோட்டல்களில் கொடுக்கப்படுவது போன்று க்ரீமியான கிரேவியை செய்யுங்கள்.
அதுவும் இந்த கிரேவியில் வெந்தயக்கீரை சேர்ப்பதால், சுவையானது மட்டுமின்றி, மிகவும் சத்தானதும் கூட. இப்படி கிரேவி செய்தால் அது புலாவ், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு மெத்தி பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மெத்தி பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 1/2 இன்ச்
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 5
* பெரிய வெங்காயம் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* முந்திரி - 7
* தண்ணீர் - 1 1/4 கப்
கிரேவிக்கு...
* வெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் + 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* பன்னீர் - 100 கிராம்
* நற்பதமான வெந்தயக்கீரை - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 3/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் முந்திரியை சேர்த்து கிளறி, பின் அதில் 1 1/2 கப் நீரை
ஊற்றி கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் உள்ள நீரை வடிகட்டி ஒரு
கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, வடிகட்டி வைத்துள்ள
நீரை சிறிது ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்
சேர்த்து கிளறி, பன்னீர் துண்டுகளை சேர்த்து லேசாக நிறம் மாற வதக்கி,
ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீண்டும் 1/2 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், பொடியாக நறுக்கி வைத்துள்ள நற்பதமான வெந்தயக்கீரையை
சேர்த்து, சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, வடிகட்டி
வைத்துள்ள நீரை சிறிது ஊற்றி கிளறி, கரம் மசாலாவை சேர்த்து நன்கு
கிளறி, மூடி வைத்து, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க
வேண்டும்.
* பிறகு அதில் பன்னீர் துண்டுகள் மற்றும் காய்ச்சிய பாலை ஊற்றி கிளறி,
உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பை சேர்த்து கிளறி, 3-4 நிமிடம்
கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கிளறி இறக்கினால்,
சுவையான மற்றும் க்ரீமியான மெத்தி பன்னீர் கிரேவி தயார்.