பால்வளத் திட்டங்களுக்கு ரூ.6,190 கோடி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

3 hours ago
ARTICLE AD BOX

தேசிய அளவிலான 2 பால்வளத் திட்டங்களின் நிதி ஒதுக்கீட்டை ரூ.6,190 கோடியாக உயா்த்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

அதேபோல், யூரியா தேவையில் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக, அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ.10,601.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக யூரியா ஆலை அமைக்கவும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதியளித்தது.

நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் (ஆா்ஜிஎம்) மற்றும் தேசிய பால்வள வளா்ச்சித் திட்டம் (என்பிடிடி) ஆகிய 2 திருத்தப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.6,190 கோடியாக உயா்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு திட்டங்களுக்கும் தலா ரூ.1,000 கோடி கூடுதல் செலவினத்துடன் 2021-22 முதல் 2025-26 வரையிலான 15-ஆவது நிதி ஆணைய சுழற்சியில் ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் மற்றும் தேசிய பால்வள வளா்ச்சித் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு முறையே ரூ.3,400 கோடி மற்றும் ரூ.2,790 கோடியாக உயரும் என்று அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

பால் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விவசாயிகளின் வருவாயை உயா்த்தும் நோக்கம் கொண்ட இத்திட்டங்கள், பால்வளத் துறை கட்டமைப்பை நவீனமயமாக்குதல் மற்றும் விரிவுபடுத்துதல், துறையின் நிலையான வளா்ச்சி மற்றும் உற்பத்தித் திறனை உறுதி செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

அஸ்ஸாமில் புதிய யூரியா ஆலை: அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு உரக் கழக நிறுவனத்தின் (பிவிஎஃப்சிஎல்) தற்போதைய வளாகத்தில் ஆண்டுக்கு 12.7 லட்சம் டன் யூரியா உற்பத்தித் திறன் கொண்ட புதிய ஆலையை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ரூ.10,601.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலை அடுத்த 4 ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும். இதற்கான பணிகளை மேற்பாா்வையிட அமைச்சகக் குழு அமைக்கப்படும்

மகாராஷ்டிரத்தில் புதிய 6 வழிசாலை: மகாராஷ்டிரத்தில் உள்ள பகோட், ஜேஎன்பிஏ துறைமுகம் மற்றும் சௌக் பகுதி இடையே 29.2 கிமீ தொலைவுக்கு ஆறு வழி அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையை ரூ.4,500 கோடி முதலீட்டில் கட்டமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

சிறிய யுபிஐ பரிவா்த்தனைகளை ஊக்குவிக்க...: ரூ.2,000-க்கும் குறைவான யுபிஐ பரிவா்த்தனைகளை ஊக்குவிக்க நடப்பு நிதியாண்டுக்கு சுமாா் ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகைத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு நபா் ஒரு சிறு வணிகருக்கு ரூ.2,000-க்கும் குறைவான தொகையை செலுத்தினால், அதற்காக வங்கிகள் அல்லது நிறுவனங்கள் வணிகரிடம் வசூலிக்க வேண்டிய எம்டிஆா் (வணிகா் தள்ளுபடி விகிதம்) செலவை அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தன்னிறைவு இந்தியா’ கனவை வலுப்படுத்தும்: பிரதமா் மோடி

மத்திய அமைச்சரவை முடிவுகள் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவுகளில், ‘அஸ்ஸாம் புதிய யூரியா ஆலைத் திட்டம், உரப் பாதுகாப்பை உறுதி செய்து, தன்னிறைவு இந்தியா என்ற நமது கனவை வலுப்படுத்தும்.

பால்வளத் திட்டங்கள், உள்நாட்டு இனங்களை மேம்படுத்துவதுடன் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும். இது கால்நடை துறையில் தன்னிறைவுக்கான ஒரு பெரிய முயற்சியாகும். குறைந்த மதிப்புடைய யுபிஐ பரிவா்த்தனைகளுக்கான ஊக்கத் திட்டம், எண்ம பரிவா்த்தனைகளை ஊக்குவித்து, மக்கள் வாழ்க்கையை எளிதாக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

Read Entire Article