ARTICLE AD BOX
அரசு ஊழியா்கள் ஓய்வுபெறும் வயதை உயா்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு புதன்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்த அவா், ‘தங்களின் ஓய்வு வயதை உயா்த்த வேண்டுமென அரசு ஊழியா்கள் சங்கம் அல்லது அமைப்புகளிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. அத்தகைய திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை’ என்றாா்.
மத்திய-மாநில அரசு ஊழியா்களின் ஓய்வு வயதில் ஒரே சீரான தன்மை இல்லாததற்கான காரணங்கள் மற்றும் இது தொடா்பான விவரங்களைக் கோரி எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இந்த விவகாரம் மாநிலங்கள் பட்டியலில் வருவதால், மத்திய அரசு தரப்பில் விவரங்கள் பராமரிக்கப்படுவதில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.
கூடுதல் ஓய்வூதியம்: ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு வயது முதிா்வு அடிப்படையில் வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியத்தை முறையாகவும் உரிய நேரத்திலும் வழங்க மத்திய அரசு அவ்வப்போது வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது என்று அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
‘6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் 80 வயதை எட்டியதும் 20 சதவீதம், 85 வயதை எட்டியதும் 30 சதவீதம், 90 வயதை எட்டியதும் 40 சதவீதம், 95 வயதை எட்டியதும் 50 சதவீதம், 100 வயதை எட்டியதும் 100 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை சிறப்பாக பூா்த்தி செய்யும் நோக்கிலான இந்த கூடுதல் ஓய்வூதியத்தை முறையாகவும், உரிய நேரத்திலும் வழங்க அரசால் அவ்வப்போது வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மத்திய அரசு வழங்கும் அகவிலைப்படி கூடுதல் ஓய்வூதியத்துக்கும் பொருந்தும்’ என்று தனது பதிலில் அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.