தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இது முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காகவும், முக்கியமாக பெண்களுக்கான நிதி திட்டங்களை விரிவுபடுத்துவது போன்ற முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொழி பிரச்சினையும், நிதி ஒதுக்கீடுகளும் தொடர்பான சர்ச்சைகள் நடந்து வரும் சூழலில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை (NEP) தொடர்பான விவாதங்களில் தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த பட்ஜெட்டில் முதன்முறையாக தேசிய ரூபாய் சின்னம் (₹) நீக்கப்பட்டு, தமிழ் எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தமிழ்நாட்டின் NEP எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரத்தில், சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பார்வைக்காக லைவ் முறையில் திரையிடப்பட உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மரினா கடற்கரை போன்ற முக்கிய இடங்கள் அடங்கும்.
2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து இந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக கட்சிகள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு மற்றும் அதிகரித்து வரும் கடன்கள் போன்ற காரணங்களால் அரசை விமர்சித்து வருகின்றன. இந்த பிரச்சினைகள் பட்ஜெட் விவாதங்களில் முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 15 ஆம் தேதி வேளாண்மை பட்ஜெட் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களால் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் விவாதங்கள் மார்ச் 17 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.