ARTICLE AD BOX
Reciprocal Tariff: மோடிக்கு இது பிடிக்கவில்லை.. ஆனாலும் இதுதான் முடிவு! டிரம்ப்பின் அதிரடி பேட்டி!
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அமெரிக்காவிற்கு சென்றிருந்தபோது, 2-வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் வரி, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். ஆனால் இந்த சந்திப்புக்கு முன்னதாக ட்ரம்ப் ஒரு முக்கிய முடிவு எடுத்தார். அதுதான் ரெசிபிராக்கல் வரிமுறை. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் ரெசிபிராக்கல் வரிவிதிப்பை அறிமுகம் செய்தார்.
அதாவது ஒரு நாடு அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அப்போது பிற நாடுகள் விதிக்கும் வரிக்கு இணையாக அமெரிக்காவும் வரிவிதிப்பு செயல் முறையை கையில் எடுக்கும். இந்த முடிவு நியாயமான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் டொனால்ட் டிரம்ப் இந்த வரிமுறையை அறிமுகம் செய்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்திய நேர்காணலின் போது பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்தும், ரெசிப்ரோக்கல் வரி குறித்தும் பேசினார். உலகின் பெரும் பணக்காரர் மற்றும் டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் உடன் சேர்ந்து ஃபாக்ஸ் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற அமெரிக்க அதிபர். இப்போது அமெரிக்காவின் பல தயாரிப்புகள் உலக நாடுகளில் விற்க முடியவில்லை, உதாரணமாக அமெரிக்க வாகனங்களுக்கு உலகில் அதிகப்படிடான இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் 100% வரி விதிக்கப்பட்டு உள்ளது, இது மிகவும் நியாயமற்றது என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் உடனான நேர்காணலில், இந்தியாவில் விதிக்கப்படும் வரி குறித்தும் பேசினார். "உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் நம்மை பயன்படுத்திக் கொள்கின்றன, வரிகள் மூலம் தான் இதை அவர்கள் செய்கின்றனர். உதாரணமாக இந்தியாவில் ஒரு காரை விற்பனை செய்வது சாத்தியமற்றதாக உள்ளது. இது உண்மையா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் அப்படி இருக்கலாம் என்று தோன்றுகிறது" என கூறினார்.
அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனை செய்வதை இது போன்ற அதிக வரி சாத்தியமற்றதாக மாற்றுகிறது என்றும் வாதிட்டார். மேலும் டொனால்ட் டிரம்ப் இந்தியாவால் விதிக்கப்படும் அதிகமான வரி குறித்து பேசுகையில், தான் பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்காவில் உள்ள நியாயமான வரிமுறை குறித்து தெரிவித்ததாகவும், உலகிலேயே கிட்டத்தட்ட அதிகமான வரி வசூல் செய்யும் நாடாக இந்தியா இருப்பதாகவும் நேர்காணலில் தெரிவித்தார். அப்போது எலான் மஸ்க்கும் ஆட்டோ இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் டொனால்டு டிரம்ப் பேசுகையில், மோடி உடனான சந்திப்பில் தான் இந்த ரெசிப்ரோக்கல் வரிமுறை குறித்து தெரிவித்தது பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை என்றும் டொனால்ட் டிரம்ப் கூறினார். "நீங்கள் என்ன வரி வசூல் செய்கிறவர்களோ? அதை நாங்களும் வசூல் செய்வோம் என்று டிரம்ப் கூறியதாகவும், மோடி இல்லை! இல்லை! இந்த வரிமுறை எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியதாகவும் தெரிவித்தார். அதற்கு மீண்டும் ட்ரம்ப்.. இல்லை! இல்லை! நீங்கள் என்ன வசூலித்தாலும் நானும் கட்டணம் வசூலிக்க போகிறேன்! நாங்கள் வர்த்தகம் செய்யும் அனைத்து நாட்டிலும் இதே முறையை தான் செய்யப் போகிறோம். யாரும் என்னுடன் வாதிட முடியாது என்றும் தெரிவித்தார்.
நியாயமான வர்த்தக நடைமுறைக்காக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அமெரிக்காவிடம் எந்த நாடுகள் அதிக வரி வசூலித்தாலும் அவர்களிடமும் வசூலிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியாவைப் பற்றி குறிப்பிட்ட ட்ரம்ப், எந்த நாடும் எங்களிடம் விலக்குகளை எதிர்பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார். இந்தியா பிற நாடுகளை விட அதிக வரி வசூல் செய்வதாகவும் கூறியிருந்தார்.