ARTICLE AD BOX
NEEK Cheyyaru Balu Review: NEEK எப்படிதான் இருக்கு.. செய்யாறு பாலு எல்லாத்தையும் சொல்லிட்டாரே!
சென்னை: தனுஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள மூன்றாவது படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்த படத்தை தனுஷ் இயக்கியது மட்டும் இல்லாமல், தானே தயாரித்தும் உள்ளார். படத்தின் தனுஷின் அக்கா மகன் பவிஷ், அனிகா ராஜேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். படத்தில் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடித்துள்ளனர். படம் இன்று அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் பார்த்த செய்யாறு பாலு படம் குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " தான் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண்ணிடம், தனது காதல் தோல்வியை சொல்லும் கதாநாயகனின் கதை. 2கே இளைஞர்களை மனதில் வைத்து இந்தப் படத்தை தனுஷ் அங்குலம் அங்குலமாக இயக்கியுள்ளார். படத்தின் நாயகனாக வரும் தனுஷின் அக்கா மகன், பவீஷ் தனுஷை போலவே உள்ளார். படத்தின் பலமாகவும் பவீஷ் உள்ளார். படத்தின் கதாபாத்திர தேர்வு என்பது சிறப்பாக உள்ளது. பணக்காரப் பெண்ணை சாதாரண மிடில் கிளாஸ் பையன் காதலிக்கிறார். ஆனால் அந்த பெண் பணக்கார பெண் என்பது பையனுக்கு தெரியாது.

பெண்ணின் அப்பாவைச் சந்திக்கும்போது பணத்திற்காகத்தானே எனது மகளை விரும்பினாய் எனக் கூற, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது. இறுதியாக கதாநாயகனுடன் பழகிப் பார்க்கச் சொல்கிறார். பழகி பார்த்த பின்னர் ஒரு உண்மை தெரிய வருகிறது. அந்த உண்மை படத்தின் மையக்கதையாக உள்ளது. உண்மை வெளியே தெரிந்த பின்னர் இருவருக்கும் இடையிலான காதல் பிரிவில் முடிகிறது. ஆனாலும் காதலை மறக்க முடியவில்லை. காதல் பிரிவுக்குப் பின்னர் அந்த பெண் காணாமல் போய்விடுகிறாள். ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் திருமண பத்திரிகை கதாநாயகனுக்கு வருகிறது. அதன் பின்னர் என்ன ஆனது என்பது மீதி கதையை உள்ளது.

தனுஷ்: செம ஜாலியான படம். படத்தை ரசிகர்கள் கொண்டாடி விசில் அடிக்கிறார்கள். அங்குலம் அங்குலமாக ரசித்து, 2கே கிட்ஸ்களின் மனதில் நிற்க வேண்டும் என இந்தப் படத்தை எடுத்துள்ளார். படத்தில் குறைகளே இல்லையா என்றால், படத்தில் குறைகள் உள்ளது. குறைகளை கடந்து இன்றைய கால கட்டத்தில் தியேட்டருக்கு யார் அதிகமாக வருகிறார்கள் என்பதை மனதில் வைத்து படத்தை இயக்கியுள்ளார். அதனால்தான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படத்தை தயாரித்துள்ளார்.

நடிப்பு: பவீஷ் சிறப்பாக நடித்துள்ளார். தனுஷ் அவரிடம் பிரமாதமாக வேலை வாங்கியுள்ளார். மேத்யூ தாமஸ் படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளார். அனிகா தனது மேனரிஷத்திலும் எக்ஸ்பிரஷ்னிலும் ஸ்கோர் செய்துள்ளார். இவர்கள் அனைவரையும் கடந்து இந்தப் படத்தில் ரசிகர்களை திருப்தி படுத்தியது யார் என்றால் அது, ஜி.வி. பிரகாஷ் குமார் தான்.

ஜி.வி: அப்பா மகள் பாசம் சூப்பராக உள்ளது. சரத்குமார் படத்தில் கொஞ்ச நேரம்தான் வருகிறார். சூப்பராக நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் பாதிக்குப் பின்னர் மொத்தமாக ஐந்து கதாபாத்திரங்கள்தான் உள்ளது. அந்த ஐந்து கதாபாத்திரங்களும் அருமை. ஜி.வி. பிரகாஷ் ஒரு பாடலுக்கு கேமியோ செய்துள்ளார். தியேட்டரே அப்லாஸ் செய்கிறது. படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை போதையாகவே உள்ளது. இது ஒரு குறையாக உள்ளது. அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகளைப் பார்த்தால் பலரும் எமோஷ்னல் ஆகிவிடுவார்கள். இவை அனைத்தையும் கடந்து படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக உள்ளது. 2கே கிட்ஸ் கட்டாயம் இந்த படத்தை கொண்டாடுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
