James Dyson Award 2025: 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச அளவிலான ஜேம்ஸ் டைசன் விருதுக்கு பொறியியல் மற்றும் வடிவமைப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசுத் தொகை ரூ.30 லட்சம் ஆகும்.

இதுகுறித்து விருது அமைப்பு கூறும்போது, "ஜேம்ஸ் டைசன் விருது ஒரு கண்டுபிடிப்பாளராக உங்களுக்கான பெயரை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகும். இதன்மூலம் குறிப்பிடத்தக்க பணப் பரிசை வெல்வதோடு, உங்கள் தொழில் வாழ்க்கையை உருவாக்கலாம், உங்கள் சகாக்களின் மதிப்பைப் பெறலாம். மேலும் உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்குவதற்கான நம்பிக்கையைப் பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம், ஏன் விண்ணப்பிக்கலாம்?

உலகின் மிக முக்கியமான சவால்களை நிவர்த்தி செய்யும் மற்றும் மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்ட புதுமையான, சிக்கல் தீர்க்கும் யோசனைகளை சமர்ப்பிக்க மாணவர்களுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பரிசு?

உலகளாவிய வெற்றியாளருக்கு (Global winners) சுமார் ரூ.31 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும்.

அதேபோல தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பில், பரிசு வழங்கப்படும்.

இந்த விருதுக்கு ஜூலை 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேசிய வெற்றி பெறுவோரின் விவரங்கள் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும். சர்வதேச அளவிலான வெற்றியாளர்களின் விவரங்கள் நவம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க என்ன தகுதி? (James Dyson Award 2025: Eligibility Requirements)

பொறியியல், பொருள் வடிவமைப்பு மற்றும் தொழிற்சாலை வடிவமைப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்குள், இந்த பாடங்களை முடித்த பட்டதாரிகள்.

பொறியியல் அல்லது வடிவமைப்பில் பட்டப்படிப்பு நிலை பயிற்சி பெற்றவர்கள் (தற்போதைய அல்லது கடந்த நான்கு ஆண்டுகளுக்குள்)- Degree-level apprentices.

எந்த நாடுகளில் எல்லாம் கலந்துகொள்ளலாம்?

ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, சீனா, ஹாங்காங், தைவான் (சீனா), பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுகல், சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டு வெற்றி பெற்றது யார்?

கடந்த ஆண்டுக்கான ஜேம்ஸ் டைசன் விருதை, இந்திய மாணவர் வென்றார். ஒடிசாவைச் சேர்ந்த கோமல் பாண்டா என்னும் மாணவர் எடுத்துச் செல்லக்கூடிய இன்சுலின் குளிர்விப்பானைக் (portable insulin cooler) கண்டுபிடித்ததற்காக இந்த விருதைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.