ARTICLE AD BOX
Infosys: பயத்தில் டிரைனி ஊழியர்களின் தேர்வு ஒத்திவைப்பு.. அடுத்த பணிநீக்கம் ரத்து..!
மைசூர்: இன்போசிஸ் நிறுவனம் பயிற்சி நிலையில் இருந்த சுமார் 300க்கும் அதிகமான டிரைனி ஊழியர்களை திடீரென பணிநீக்கம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மற்ற பயிற்சி ஊழியர்களுக்கு நடைபெற இருந்த தேர்வினை தள்ளி வைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயிற்சி நிலையில் வேலைக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்கள் மைசூரில் இருக்கும் நிறுவன வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சியை முடித்த பிறகு அவர்களுக்கு இன்டர்னல் தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த உள்நிலை தேர்வுகளில் தேர்வாக கூடிய நபர்களுக்கு மட்டுமே இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

அந்த வகையில் இன்போசிஸ் நிறுவனத்தில் பயிற்சி நிலை ஊழியர்களாக இருந்தவர்களுக்கு கடந்த ஆண்டு இன்டர்னல் தேர்வுகள் நடந்தன. அப்படி நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்வாகாத சுமார் 300க்கும் அதிகமானவர்களை கடந்த வாரம் இன்போசிஸ் நிறுவனம் திடீரென பணி நீக்கம் செய்தது. இவ்வாறு ஒரே நேரத்தில் 300-க்கும் அதிகமானவர்களை பணி நீக்கம் செய்தது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியது.
இது தொடர்பாக ஐடி ஊழியர்களுக்கான யூனியன் மத்திய தொழில்துறையிடம் புகார் அளித்திருந்தது. மத்திய தொழிலாளர் நலத்துறையும் இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி கர்நாடக மாநில அரசுக்கு ஆணையிட்டது. ஐடி ஊழியர்களுக்கான யூனியன் இன்போசிஸ் நிறுவனத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த உள்நிலை தகுதி தேர்வுகளை இன்போசிஸ் நிறுவனம் தள்ளி வைத்திருக்கிறது. பிப்ரவரி 18ஆம் தேதி அன்று சுமார் 800 ஊழியர்களுக்கு இந்த இன்டர்னல் தேர்வுகள் நடத்தப்படுவதாக இருந்தது 19ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு யாரெல்லாம் வேலையில் தக்கவைக்கப்படுகிறார்கள் என்று அறிவிப்பு வெள்ளிக்கிழமை பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் என முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இன்போசிஸ் நிறுவனம் ஊழியர்களுக்கான உள் தகுதி தேர்வினை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பயிற்சி நிலை ஊழியர்கள் அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் உங்களுக்கான உள்நிலை தகுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான நாள் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதால் அதுவரை இருக்கும் காலத்தை தேர்வுக்கு படிப்பதற்காக பயன்படுத்தி கொள்ளுமாறும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயிற்சி நிலை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதே வேளையில் நாடு முழுவதும் பேசப்படும் விஷயமாகவும் இது மாறிவிட்டது. மத்திய தொழிளார் நலத் துறையும் , மாநில தொழிலாளர் நலத்துறையும் விசாரணை நடத்தும் நிலையில் தான் இன்போசிஸ் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது.
Story written by: Devika