ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணியை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
இது சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி அடித்திருக்கும் 82வது சதமாகும். இது குறித்து பாராட்டியுள்ள இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கோலியை கோஹினூர் வைரம் என்று பாராட்டி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஒரு சவாலான சமயத்தில் ஒரு வீரரின் திறன் உருவாகாது. அது வெளிப்படும்."

"விராட் கோலியும் அப்படி தான். அவரின் மகிமை இது போல் காலகட்டத்தில் வெளிப்படும். விராட் கோலி இன்னும் உத்வேகத்துடன் விளையாடுகிறார். நல்ல உடல் தகுதியுடன் இருக்கின்றார். இந்த சதத்தை பார்த்த பிறகு நான் உறுதியுடன் கூறுவேன். இன்னும் விராட் கோலி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை விளையாடுவார்."
"நிச்சயம் பத்து முதல் 15 சதம் வரை அடிப்பார். நான் இதை எந்த தயக்கமும் இன்றி உறுதியாக சொல்கிறேன். ஆனால் பார்க்கும்போதே தெரிகிறது. சவாலான நேரத்தில் ஒரு வீரர் எப்படி செயல்படுகிறார் என்பதுதான் அனைத்து விதமான அளவுகோல். ஆனால் விராட் கோலி இது போன்ற சமயங்களில் அபாரமாக செயல்படுகிறார்."
"கடந்த ஆறு மாதத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது. ஆனால் விராட் கோலி தன்னுடைய மேடையை அவரே தேர்ந்தெடுத்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக ரன்கள் அடிக்கும் போது அதை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். பத்து ஆண்டுகள் வரை நினைவில் வைத்துக் கொள்வார்கள்."
"இந்தப் போட்டியில் விராட் கோலியின் ஆரம்பகட்ட இன்னிங்சை பார்க்கும்போது நாம் பழைய விராட் கோலியை பார்க்க முடிந்தது. பாகிஸ்தான் வீரர்கள் நெருக்கடி கொடுத்த போது அவர் தன்னுடைய இயல்பையும் திறனையும் வெளிப்படுத்தினார். விராட் கோலி போன்ற கிரிக்கெட் வீரர்கள் தான் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் இளைஞர்களை ஊக்கப்படுத்த முடியும்."
"கிரிக்கெட் போன்ற விளையாட்டு வளர வேண்டும் என்றால் உங்களுக்கு ரோல் மாடல் தேவை. அதுதான் விராட் கோலி. ஒரு தலைமுறையின் கிரிக்கெட் வீரர் தான் கோலி. அவர் கோகினூர் வைரம் போன்றவர். வெற்றிகரமான சேஸில் விராட் கோலியின் சராசரி 89 என்ற அளவில் இருக்கிறது. இதன் மூலம் அவர் நெருக்கடியை அபாரமாக கையாளுகிறார் என்று தெரிகிறது. இதுதான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரருக்கான அடையாளமாகும்" என்று நவஜோத் சிங் பாராட்டியுள்ளார்.