ARTICLE AD BOX

image courtesy: AFP
கராச்சி,
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன் வித்தியாசத்திலும், இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் தோல்வி கண்டது. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. இன்று நடைபெற்று வரும் வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் குரூப் ஏ-வில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் தொடரில் இருந்து வெளியேறும். இந்நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்ததால் பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஆகிப் ஜாவித் உட்பட, துணை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிறியாளர்கள் அனைவரையும் பதவியில் இருந்து விடுவிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைந்த பின்னர் வெளியாகும் என கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்த பின்னர் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.