ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ள நிலையில், ஒரு விஷயம் இந்திய அணியை கவலை அடைய வைக்கும் வகையில் உள்ளது. இந்தத் தொடரில் அதிக கேட்ச்களை தவறவிட்ட அணியாக இந்தியா உள்ளது.
மறுபுறம் குறைந்த அளவில் கேட்சுகளை தவறவிட்ட அணியாக நியூசிலாந்து உள்ளது. எனவே, இறுதிப் போட்டியில் இந்த விஷயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக மாற வாய்ப்பு உள்ளது. நியூசிலாந்துக்கு இது சாதகமான அம்சமாக உள்ளது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் மொத்தம் 21 கேட்ச் வாய்ப்புகளை பெற்றது. அதில் ஏழு கேட்ச்களை இந்திய அணி தவறவிட்டுள்ளது. அதாவது 25 சதவீத கேட்ச் வாய்ப்புகளை இந்திய அணி தவறவிட்டு இருக்கிறது. இது மிகவும் கவலை அளிக்கும் ஒரு விஷயமாக உள்ளது.
இந்தத் தொடரில் பங்கேற்ற 8 அணிகளில் கேட்ச் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட அணிகளில் இந்தியா நான்காவதாக உள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது அதிக கேட்சுகளை தவறவிட்டு இருக்கிறது.
உதாரணத்திற்கு, பாகிஸ்தான் அணி ஆறு கேட்ச் வாய்ப்புகளில் நான்கு கேட்ச்களை தவறவிட்டு இருக்கிறது. அந்த அணியின் கேட்ச் சதவீதம் 60 என்பதாக உள்ளது. ஆனால் இந்தியா 21 கேட்ச் வாய்ப்புகளில் 7 வாய்ப்புகளை தவறவிட்டதால் கேட்ச் சதவீதம் 75 என்பதாக உள்ளது.
IND vs NZ: "நியூசிலாந்து 7150.. இந்தியா 0".. பைனலுக்கு முன் வம்பிழுத்த பாகிஸ்தான் வீரர் ஜுனைத் கான்
சதவீத அடிப்படையில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தாலும், அரையிறுதிக்கு முன்னேறிய அணிகளில் இந்தியா மிகவும் மோசமாக உள்ளது. நியூசிலாந்து அணி 24 கேட்ச் வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பை மட்டுமே தவற விட்டு இருக்கிறது. தென்னாப்பிரிக்கா 15 கேட்ச் வாய்ப்புகளில் இரண்டை மட்டுமே தவறவிட்டு இருந்தது.
ஆஸ்திரேலியா 14 கேட்ச் வாய்ப்புகளில் நான்கை தவற விட்டு இருந்தது. இந்த மூன்று அணிகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா 21 கேட்ச் வாய்ப்புகளில் 7 வாய்ப்புகளை தவற விட்டு இருக்கிறது.
தற்போது கேட்ச் பிடிப்பதில் சிறந்த அணியாக இருக்கும் நியூசிலாந்துடன் இந்தியா விளையாட உள்ளது. எனவே, இந்த இறுதிப் போட்டியில் ஃபீல்டிங் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த விஷயத்தில் இந்திய அணி கவனமாக செயல்பட வேண்டும்.