ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை ரோஹித் சர்மா வென்றார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது.
ரோஹித் சர்மா கேப்டனாக இரண்டாவது ஐசிசி கோப்பையை வென்றார். இந்த இறுதிப் போட்டியில் தனிப்பட்ட முறையில் சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்திய அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தார். இதுவரை ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்து கடுமையான விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில், அவை அனைத்துக்கும் இறுதிப் போட்டியில் கேப்டன் இன்னிங்க்ஸ் ஆடி பதிலடி கொடுத்து இருக்கிறார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி துவங்கிய போது, ரோஹித் சர்மா வழக்கம் போல அதிரடி ஆட்டத்தை ஆடி மிகச்சிறந்த துவக்கம் அளித்தார். துபாய் ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்த நிலையிலும் ரோஹித் அதிரடியாக ஆடினார்.
மறுபுறம் சுப்மன் கில் மிக நிதானமாகவே ஆடினார். அவர் 50 பந்துகளில் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்படி என்றால் ஆடுகளம் எந்த அளவுக்கு மந்தமாக இருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் ரோஹித் சர்மா நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். அதன் பின் சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் மிகவும் நிதானமாக ஆடி விக்கெட் வீழ்ச்சியை நீண்ட நேரம் தடுத்து நிறுத்தினார்.
ரோஹித் அரைசதம் கடந்து 83 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார், ஏழு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸ் அடித்து இருந்தார். 27-வது ஓவரில் தான் அவர் ஆட்டம் இழந்தார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கி 26 ஓவர்கள் வரை நின்று ஆடி 76 ரன்கள் சேர்த்தார். அதன் பின் இந்திய அணி விக்கெட் வீழ்ச்சியின் அழுத்தத்தில் இருந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் 48, அக்சர் பட்டேல் 29, கே.எல். ராகுல் 34 ரன்கள் எடுக்க வெற்றி பெற்றது.
IND vs NZ Final: ஜெயிக்க வேண்டிய மேட்ச்சில் தோல்வி.. காரணமே இதுதான்.. கதறிய நியூசிலாந்து
இந்த வெற்றிக்கு கேப்டன் ஆடிய அதிரடி துவக்கம் தான் முக்கிய காரணம் என்பதை அடுத்து ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது பற்றி ரோஹித் பேசுகையில், ராகுல் டிராவிட் மற்றும் கௌதம் கம்பீரிடம் தான் தனது அதிரடி ஆட்டம் ஆடும் முறை பற்றி பேசியதாகவும், துபாயில் ஏற்கனவே சில முறை ஆடியதால் தனக்கு இந்த பிட்சை புரிந்து கொள்ள முடிந்ததாகவும் கூறினார்.
ஜடேஜா எட்டாம் வரிசையில் வருகிறார், அந்த அளவுக்கு பேட்டிங் வரிசையில் பலம் இருப்பதால் முதலில் அதிரடியாக ஆடுவதற்கு அது அதிக சுதந்திரத்தை அளிக்கிறது என்றார் ரோஹித் சர்மா.