ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் மற்றும் இந்திய அணிகள் மோத உள்ள குரூப் ஏ பிரிவு போட்டி துபாயில் பிப்ரவரி 20 அன்று தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்கான வானிலை அறிக்கையில் என்ன கூறப்பட்டு இருக்கிறது, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்வது சரியா என்று பார்க்கலாம்.
துபாயில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கை தெளிவாகக் கூறி இருக்கிறது. அதே சமயம், இரவு நேரங்களில் பனித்துளிகள் பெருகும் அபாயம் உள்ளது. அது இரண்டாவதாகப் பந்து வீசும் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். பந்துவீசும்போது பந்து வழுக்கிக் கொண்டு போக வாய்ப்புள்ளது.

குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய அணியில் தற்போது அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி ஆகியோர் வேகப் பந்துவீச்சாளர்களாக களமிறங்க வாய்ப்பு உள்ளது.
சுழற் பந்துவீச்சாளர்களாக வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோர் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு இரண்டாவதாக பந்து வீசும் நிலை ஏற்பட்டால் பனித்துளிகள் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
எனவே, இந்திய அணி டாஸ் வென்றால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே சரியான முடிவாக இருக்கும். வங்கதேச அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்து, அதன் பின் சேஸிங் செய்வதே அங்குள்ள வானிலைக்கு சரியான முடிவாக இருக்கும்.
மற்றபடி, துபாயில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி நடைபெறும் போது வானம் தெளிவாகவும், முதல் பாதியில் சூடாகவும் மற்றும் ஈரப்பதம் இல்லாத காற்று வீசும். மாலை நேரத்தில் ஈரப்பதம் உள்ள காற்று வீசும். இதுதான் பந்துவீச்சாளர்களுக்குப் பெரிய தலைவலியாக இருக்கும். எனவே, இந்தப் போட்டியில் டாஸ் முக்கியத்துவம் பெற்று இருக்கிறது. டாஸ் வெல்லும் அணி நிச்சயமாக முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.