ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் குரூப் ஏ பிரிவு போட்டி பிப்ரவரி 20 (இன்று) நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும், வேகப்பந்து வீச்சாளர்களாக யார் இடம் பெறுவார்கள், சுழற் பந்துவீச்சாளர்களாக யார் இடம் பெறுவார்கள், ரிஷப் பண்ட்டுக்கு இடம் கிடைக்குமா? என்பது பற்றிப் பார்க்கலாம்.
இந்திய அணியில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும். ஏனெனில், போட்டி நடைபெறும் துபாய் மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைப்பு வழங்கும் என்பதால் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும். ஹர்திக் பாண்டியா பகுதி நேர வேகப்பந்து வீச்சாளராகச் செயல்படுவார் என்பதால் வேகப்பந்து வீச்சில் இந்திய அணி பெரிய சிக்கலை எதிர்கொள்ளாது.

சுழற்பந்து வீச்சாளர்களில் யாரை தேர்வு செய்வது என்பதிலும் சிக்கல் உள்ளது. அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்ஸ்மேன்களாகவும் செயல்படுவார்கள் என்பதால் அவர்கள் இருவரும் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இடம் பெற்றுவிடுவார்கள். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளர் என்ற ஒரு இடத்துக்கு வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் எனும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டி போடும் நிலை உள்ளது. இவர்களில் குல்தீப் யாதவ் அதிக அனுபவம் உடையவர் என்ற அடிப்படையில் அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
பேட்டிங்கைப் பொறுத்தவரை ஒரே ஒரு இடம் மட்டுமே சிக்கலாக உள்ளது. அது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்பது. கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவர் அந்த ஒரு இடத்துக்குப் போட்டி போடுகின்றனர். அவர்களில் ஒருவரையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது.
ஆனாலும், கே.எல். ராகுல் அதிக அனுபவம் உடையவர் என்பதும், ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்டை விடச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என்பதாலும் அவருக்கே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அவர் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் 500 ரன்களுக்கு அதிகமாகச் சேர்த்து இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்தார். இது போன்ற காரணங்களால் ரிஷப் பண்ட்டை விட கே.எல். ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மற்றபடி பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் முதல் ஆறு வரிசையில் களம் இறங்குவார்கள். அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா "ஃப்ளோட்டிங்" பேட்ஸ்மேன்களாக பேட்டிங் வரிசையில் சூழ்நிலைக்கு ஏற்ப களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்திய அணி பிளேயிங் 11:
ரோஹித் சர்மா (கேப்டன்)
சுப்மன் கில்
விராட் கோலி
ஸ்ரேயாஸ் ஐயர்
கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்)
ஹர்திக் பாண்டியா
அக்சர் படேல்
ரவீந்திர ஜடேஜா
முகமது ஷமி
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்