ARTICLE AD BOX
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை வீழ்த்த முடியும் என முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
வழக்கம்போல இந்திய அணிக்கு எதிராக பரபரப்பான பதிவை வெளியிட்டு இருக்கிறார் மைக்கேல் வாகன். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியாவும், நியூசிலாந்தும், குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின. இந்திய அணி குரூப் ஏ பிரிவில் முதல் இடம் பெற்றிருந்தது. ஆஸ்திரேலியா குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தை பெற்றிருந்தது.

இதை அடுத்து இந்த இரண்டு அணிகளும் துபாயில் இன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளன. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏனெனில் இந்த இரண்டு அணிகளும் சரி சமமான அணிகள்.
இதுவரை சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பலமுறை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியுள்ளன. அவற்றில் ஆஸ்திரேலியா இந்திய அணியை நாக்-அவுட் போட்டிகளில் பலமுறை வீழ்த்தியுள்ளது. சில முறை இந்தியாவும் ஆஸ்திரேலியாவை நாக்-அவுட் போட்டிகளில் வீழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மைக்கேல் வாகன் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
"சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எந்த அணி இந்தியாவை வீழ்த்துகிறதோ அந்த அணி தான் கோப்பையை வெல்லும். இது அனைவருக்கும் தெரிந்த எளிதான விஷயம் தான். ஆஸ்திரேலியா தான் இந்தியாவை வீழ்த்தும் என நான் நினைக்கிறேன். ஆனால், துபாயில் உள்ள பிட்ச்சில் அது கடினம்தான்" எனக் கூறியிருக்கிறார்.
IND vs AUS: "செமி பைனல் பிட்ச்சை தயார் செய்ததே ஒரு ஆஸ்திரேலியர் தான்".. யார் அந்த மேத்யூ சாண்டரி?
ஏனெனில் துபாயில் உள்ள ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு அந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருக்கும் என்பதை தான் மைக்கேல் வாகன் இவ்வாறு சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் இந்திய அணி நான்கு சுழற் பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது.
ஜடேஜா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா வேகப் பந்துவீச்சாளர்களாக களமிறங்க வாய்ப்பு உள்ளது.