ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்தது. கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பதினோராவது முறையாக டாஸில் தோல்வியடைந்து இருக்கிறார்.
இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 14-வது முறையாக டாஸில் தோல்வியடைந்து இருக்கிறது. உலகிலேயே எந்த அணியும் இத்தனை முறை ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து டாஸில் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இத்தனை முறை டாஸில் தோல்வி அடைந்தாலும், வெற்றிகளையும் பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ரோஹித் சர்மா இதில் மோசமான சாதனை ஒன்றை செய்திருக்கிறார். உலக அளவில் தொடர்ந்து அதிக டாஸில் தோல்வி அடைந்த கேப்டன்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா முதலிடத்தில் இருக்கிறார். அவர் அக்டோபர் 1998 முதல் மே 1999 வரையிலான காலகட்டத்தில் 12 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து டாஸில் தோல்வி அடைந்துள்ளார்.
அடுத்த இடத்தில் நெதர்லாந்து அணியின் கேப்டன் பீட்டர் போரன் இருக்கிறார். அவர் மார்ச் 2013 முதல் ஆகஸ்ட் 2013 வரை 11 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து டாஸில் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து ரோஹித் சர்மா நவம்பர் 2023 முதல் தற்போது மார்ச் 2025 வரை 11 முறை ஒருநாள் போட்டிகளில் டாஸில் தோல்வி அடைந்து இருக்கிறார். உலக அளவில் அதிக ஒருநாள் போட்டிகளில் டாஸ் தோற்ற கேப்டன்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா.
IND vs AUS: "ஆஸ்திரேலியா இந்தியாவை அரையிறுதியில் வீழ்த்தும்".. முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கதறல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆடிய அதே 11 வீரர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் விளையாடுகின்றனர்.
இந்திய அணியில் முகமது ஷமி மட்டுமே ஒரே முழு நேர வேகப்பந்துவீச்சாளராக அணியில் இடம் பெற்று இருக்கிறார். ஹர்திக் பாண்டியா பகுதி நேர வேகப்பந்துவீச்சாளராக இருப்பார். இவர்கள் இருவரையும் தவிர்த்து நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். அக்சர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி சுழற்பந்துவீச்சாளர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர்.