Ind vs Aus Semi Final 2025: ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் இந்தியா கடைசியாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 14 ஆண்டுகள் ஆகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. சம பலம் பொருந்திய இரு அணிகள் மோதும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது. 2023ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு இந்தியா பழிவங்குமா? ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நாக்-அவுட் போட்டிகளில் வென்று 14 ஆண்டுகள் ஆகிவிட்டது என்ற மோசமான பயணம் முடிவுக்கு வருமா? என பல கணக்குகளையும் ரசிகர்கள் கைவசம் வைத்துள்ளனர்.

கடைசி 5 போட்டிகள்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கடைசியாக மோதிய 5 போட்டிகளில், ரோகித் தலைமையிலான அணி 3 போட்டிகளில் வென்று முன்னிலை பெறுகிறது. ஆனால், இவை அனைத்துமே கடந்த 2023ல் நடந்த போட்டிகளாகும். அதே ஆண்டில் ரோகித் தலைமையிலான அணியை, அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிபோட்டியில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸ்திரேலியா நேருக்கு நேர்:

இரு அணிகளும் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 151 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலிய 84 முறையும், இந்தியா 57 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.

இந்தியா Vs ஆஸ்திரேலியா: சாம்பியன்ஸ் ட்ராபி

சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரண்டு வெற்றிகளுடன் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 1998ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்திலும், 2000ம் ஆண்டு நைரோபியில் நடைபெற்ற போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா:

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை, 14 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா அணி 9 போட்டிகளிலும், இந்தியா 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

ஐசிசி நாக்-அவுட் போட்டிகள்

2011 உலகக் கோப்பை காலிறுதி வெற்றிக்குப் பிறகு இந்தியா ஐ.சி.சி நாக் அவுட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஒருமுறை கூட வீழ்த்தவில்லை. அதன் பின்னர், எதிர்கொண்ட ஒவ்வொரு முக்கிய ஐசிசி நாக் அவுட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றுள்ளது.

2015 உலகக் கோப்பை அரையிறுதி - ஆஸ்திரேலியா வென்றது

2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி - ஆஸ்திரேலியா வென்றது

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - ஆஸ்திரேலியா வென்றது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி நாக் அவுட் தோல்விகளை முறியடிக்க இந்தியா முனைப்பு காட்டும் சூழலில், பெரிய போட்டிகளில் தனது ஆதிக்கத்தை மீண்டும் தொடர ஆஸ்திரேலியா விரும்புகிறது. இதனால், இந்த அரையிறுதி ஒரு பரபரப்பான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.