Heat Stroke: உயிரையும் பறிக்கும் வெயில்; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதுகாப்பு டிப்ஸ்

9 hours ago
ARTICLE AD BOX

இந்த வருடம் பிப்ரவரி இறுதியிலேயே வெயில் சுள்ளென்று சுட ஆரம்பித்துவிட்டது. காலை எட்டு, எட்டரை மணிக்கு அடிக்கிற வெயில்கூட இதமாக இல்லை. காலை நேரத்து வெயில்கூட எரிப்பதுபோல் இருக்கிறது. வெயில் நல்லதுதான். என்றாலும், கோடை வெயில் 'சன் ஸ்ட்ரோக்' (Sun Stroke) அல்லது 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heat Stroke) ஏற்படுத்தி உயிரையும் பறித்துவிடலாம். இதற்கு குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள் என்கிற பாகுபாடெல்லாம் இருப்பதில்லை என்கிற நிபுணர்கள், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படாமல் நம்மை காத்துக்கொள்வது எப்படி என்று சொல்கிறார்கள்.

ஹீட் ஸ்ட்ரோக் தடுக்க... தவிர்க்க...
ஹீட் ஸ்ட்ரோக் எனும் உயிர்க்கொல்லி! - நரம்பியல் மருத்துவர் லஷ்மி நரசிம்மன்.

''அதிக வெப்பத்தின் காரணமாக, நம் உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்து போவதுதான் 'ஹீட் ஸ்ட்ரோக்.’ நம் உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் (Thermostat) இருக்கிறது. சுற்றுப்புறச்சூழலில் வெப்பம் அதிகரிக்கும்போது, நம் உடலின் உள்வெப்பநிலையும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதைத் தடுப்பதற்காக, வியர்வையின் மூலமாகவும், தோல்களின் வழியாகவும் வெப்பத்தை வெளியேற்றும் வேலையை இது செய்கிறது. குளிரான பிரதேசத்தில் இருக்கும்போது நம் உடலிலிருந்து வெப்பம் வெளியேறாமல் பார்த்துக்கொள்ளும். இப்படித் தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது. இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்து (Breakdown) போகும் நிலைக்கு 'ஹீட் ஸ்ட்ரோக்' என்று பெயர். அதற்குப் பிறகு நம் உடலின் உள்வெப்பநிலை கட்டுக்குள் இருக்காது. 106, 107... 112... என மிக உச்சநிலையை அடையும். 'ஹைப்பர் பைரெக்ஸியா' (Hiperpirexia) என்னும் அதிகமான காய்ச்சல் உண்டாகும். நினைவிழப்பு ஏற்படும்.

Health: தர்பூசணி தண்ணிப்பழமா, வியாதிகளைத் தடுக்கும் பழமா? சன் ஸ்ட்ரோக் யாருக்கு, எப்போது உண்டாகும்?

ஹீட் ஸ்ட்ரோக்கில் இரண்டு வகைகள் உள்ளன. நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Non exertional heat stroke) மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Exertional heat stroke). எந்தச் செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவது நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Non Exertional Heat Stroke). வெறுமனே, உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே இது உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் ஏற்படுவது எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் (Exertional heat stroke) இள வயதுக்காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இது உண்டாகும்.

கோடைக்கு இதம், உடலுக்கு நலம்... நீர்ச்சத்து மிகுந்த கனிகள்!
'சன் ஸ்ட்ரோக்' வராமல் தடுக்க என்ன வழி ? சன் ஸ்ட்ரோக்கால் ஒருவர் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

* அதிக வெப்பமான இடங்களில் இருக்கக் கூடாது. உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறினால், ரத்தத்தில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, ரத்த ஓட்டம் தடைப்பட்டு, மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைத்துக்கொள்ளும். அதனால், சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம் உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* வெப்பத்தை உட்கிரகிக்கும் உடைகளை அணியக் கூடாது.

* உடலுக்குக் குளிர்ச்சி தரும், நீர்ச்சத்து நிறைந்த பழ வகைகளைச் சாப்பிடவேண்டும்.

சன் ஸ்ட்ரோக்கால் ஒருவர் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும். அழைத்துச் செல்வதற்கு இடைப்பட்ட நேரத்தில் ஐஸ் க்யூபை அக்குளில், கழுத்தில், தொடைக்கிடையில் வைக்க வேண்டும் அல்லது ஈரத்துணியை நன்றாகப் பிழிந்து உடலின் மீது போர்த்த வேண்டும். இதனால், உடலின் வெப்பநிலை குறைய வாய்ப்புண்டு. ஆனால், இது வெறும் முதலுதவி மட்டுமே...

Muskmelon: முலாம் பழம் குளிர்ச்சி தரும்; குடல் புழுக்களைக் கொல்லும்; அல்சரை குணப்படுத்தும்!முதியவர்களும் ஹீட் ஸ்ட்ரோக்கும்... முதியோர் நல மருத்துவர் நடராஜன்!

''வயதானவர்கள் கோடைக்காலத்தில் வெளியே செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். போயே ஆக வேண்டும் என்றால் வீட்டிலிருந்து கிளம்புவதற்குமுன், நிறைய தண்ணீர் குடித்துவிட்டுச் செல்ல வேண்டும். அத்துடன், உப்பு சேர்த்த மோர் அல்லது ஜூஸ் குடிக்கலாம். தலைக்குத் தொப்பி, கூலிங் க்ளாஸ் அணியவேண்டும். கண்டிப்பாகக் குடை எடுத்துச் செல்ல வேண்டும். வெளியே செல்லும்போது என்றில்லை... பொதுவாகவே முதியோர் கோடைக்காலத்தில் அதிகமாகத் தண்ணீர் அருந்த வேண்டும். தாக உணர்ச்சி குறைந்திருக்கும் என்பதால், அவர்கள் குறைந்த அளவே தண்ணீர் குடிப்பார்கள். எனவே, வீட்டில் உள்ளவர்கள்தான் அவர்களைத் தண்ணீர் குடிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும். சிறுநீரகம் மற்றும் இதய பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி நீர் அருந்த வேண்டும்.

Old age (Representational image)

தர்பூசணி, ஆரஞ்சு, இளநீர், நுங்கு போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடலாம். நன்னாரி சர்பத், பதநீர் குடிக்கலாம். கோடைக்காலத்தில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். கேழ்வரகு, கம்பு ஆகிய தானியங்களில் செய்யப்படும் கஞ்சி உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சியைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணிக்கும்; விரைவில் செரிமானமாகும். வெளியே சென்று வந்தால், வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்துக்கொள்வதும் உடல் சூட்டைத் தணிக்கும். கோடையில் வெளியூர்ப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. உடல் பாதிப்பு ஏதும் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.

குழந்தைகளும் ஹீட் ஸ்ட்ரோக்கும்... இயற்கை மருத்துவர் யோ. தீபா!

* லைட் கலருக்கு மாறுங்க!

வெயில் காலத்துக்கு காட்டன் ஆடை, மழைக் காலத்துக்கு உல்லன் என்று சீசனுக்கு ஏற்ப அணிவதுபோல, அணியும் ஆடையின் நிறங்களிலும் மாற்றம் வேண்டும். வெயில் காலத்தில் வெள்ளை, சந்தனம், பேபி பிங்க், பேபி ப்ளு போன்ற நிறங்களில் குழந்தைகளுக்கு ஆடையை அணிவியுங்கள். இந்த நிறங்கள் வெயிலை உடலுக்குக் கடத்தாது. கறுப்பு மற்றும் சிவப்பு நிற ஆடைகளை கோடைக் காலம் முடியும் வரை பீரோவில் பூட்டி வையுங்கள்.

* எண்ணெய்க்குளியல் கட்டாயம்!

வெயில் காலத்தில் உச்சந்தலை சூடேறுவதுதான் சன் ஸ்ட்ரோக் வருவதற்கு முக்கிய காரணம். இதைத் தடுக்க, வாரத்துக்கு இரண்டு முறை நல்லெண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்க வேண்டும். வெயில் காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் உச்சந்தலை சூடேறும். அதனால், தினமும் தலைக்கு எண்ணெய் வைப்பது அவசியம்.

* தாது உப்புகளும் வெளியேறும்!

வெயிலில் வியர்த்து வழியும்போது, உடம்புக்கு அத்தியாவசியமான தாது உப்புகளும் வெளியேறிவிடும். இதுபோன்ற சமயத்தில் பிள்ளைகள் சோர்ந்து போவார்கள். சிலருக்கு மயக்கம் வரை செல்லும். இந்தப் பிரச்னையைத் தடுக்க, பானைத் தண்ணீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு, வெல்லம், எலுமிச்சம் பழம் பிழிந்து பானகம் செய்யுங்கள். தினமும் 3 முதல் 4 தடவை வரை குடிக்கக் கொடுங்கள். தினம் ஒரு இளநீர் குடிப்பது பிள்ளைகளின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும்; உடம்பில் தாது உப்புகள் குறையாமல் பாதுகாக்கும்.

குழந்தைகளும் ஹீட் ஸ்ட்ரோக்கும்

* கூல்டிரிங்க்ஸ் வேண்டாம்!

வெயில் காலத்தில், கேஸ் நிரம்பிய கூல்டிரிங்ஸை குழந்தைகள் குடிப்பதை முற்றிலும் தவிர்க்கச் செய்யுங்கள். இவை சாப்பிட்ட உணவை மேல் நோக்கி எதுக்களிக்கச் செய்யும்.

* தண்ணீர் டப்பில் நிற்கலாம்!

விளையாடிவிட்டுச் சோர்வாக வரும் பிள்ளைகளின் உடலை உடனடியாக ஈரத்துணியால் துடையுங்கள். அல்லது, சின்ன டப்பில் தண்ணீர்விட்டு அதற்குள் பாதங்கள் நனைய நிற்க வையுங்கள். உடம்பின் சூடு மெல்ல மெல்லத் தணிந்துவிடும்.

* மாங்காய்த் தண்ணீரும் புளித்தண்ணீரும்...

வெல்லமும் மாங்காய்த் துண்டுகளும் ஊறப்போட்ட தண்ணீர், அல்லது வெல்லம் போட்ட புளித்தண்ணீரைத் தினமும் ஒரு கப் குடித்து வந்தால், சன் ஸ்ட்ரோக் ஏற்படாமல் தடுக்கலாம். அதனால்தான், இயற்கையே இந்த சீசனில் மாங்காயையும் புளியையும் விளைவிக்கிறது.

* சூடு கிளப்பும் உணவுகளைத் தவிருங்கள்!

வெயில் காலத்தில், உடலின் சூட்டை அதிகப்படுத்தும் சிக்கன், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள், மசாலா ஐட்டங்களை முற்றிலும் தவிர்க்கவும். எப்போதாவது சாப்பிட்டாலும், அன்றைக்கு மோர் குடிப்பதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். தவிர, கோடை கொடைகளான வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம், முலாம் பழம், நுங்கு, பதநீர், கரும்புச்சாறு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் பிள்ளைகளுக்குக் கொடுங்கள். நீங்களும் சாப்பிடுங்கள்.

Health: வைட்டமின்- டி குறைபாடு இருப்பவர்கள் மீள்வது எப்படி?
Read Entire Article