இந்தியா, சீனா, பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிடில் கிளாஸ் மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் முக்கியமான சேமிப்பு கருவியாக இருக்கிறது. சீனாவில் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவை சரிந்த போது கார்ப்ரேட் ஊழியர்களும், GenZ மக்களுமே அதிகளவில் தங்கத்தை வாங்கி குவித்தனர். இன்றளவும் ஒருவரின் முதலீட்டு போர்ட்போலியோவில் 10 முதல் 15 சதவீதம் வரையில் தங்கம் இருக்கலாம் என்று தான் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இப்படியிருக்கையில் 10 கிராம் தங்கம் விலை 1 லட்சம் ரூபாயை எட்டும் நிலைக்கு உயர்ந்துள்ளதால் சாமானிய மிடில் கிளாஸ் மக்கள் தங்கத்தை இனி முக்கிய சேமிப்பு கருவியாகக் கருத முடியாத நிலை உருவாகியுள்ளது. தங்கம் பிற சொத்துக்கள் போல் அல்லாமல் உடனடியாக நிதி ஆதாரம் திரட்டும் கருவியாக இருக்கும் காரணத்தால் இந்திய மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் முக்கியமானதாக விளங்குகிறது.

இந்த நிலையில் நேற்றைய அமெரிக்க பெடரல் ரிசர்வ் கணிக்கப்பட்டது போலவே வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காமல் தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதனால் பத்திர சந்தையில் இருந்த முதலீடுகள் சிறிய அளவு வெளியேறி தங்கம் மீதும், பங்குச்சந்தையிலும் குவிந்துள்ளது.
இதனால் எப்போதும் இல்லாத வகையில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3015 டாலரில் இருந்து 3055 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் இந்திய ரீடைல் சந்தையில் நாளைய வர்த்தகத்தில் தான் எதிரொலிக்கும். ஆனால் எம்சிஎக்ஸ் சந்தையில் இன்றே இதன் தாக்கம் இருக்கும் என்பதால் இன்றைய வர்த்தகத்தில் ஏப்ரல் மாதம் முடியும் 10 கிராம் தங்கத்தின் பியூச்சர்ஸ் ஆர்டர் மதிப்பு 0.30 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இன்று சென்னை மற்றும் தமிழ்நாட்டு ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 83,100 ரூபாய்க்கும், 8 கிராம் அதாவது ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து 66,480 ரூபாயாக்கும் விற்கப்பட்டு வருகிறது. இதேபோல் 24 கேரட் தூய தங்கம் விலை 220 ரூபாய் உயர்ந்து 90,660 ரூபாயாக உள்ளது.
இன்றைய தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட முக்கியமான காரணமாக இருந்தது பெட்ரல் ரிசர்வ் வங்கியின் முடிவுகள் தான். ஆனால் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பின்பு தங்க அதாவது டொனால்டு டிரம்ப் அரசின் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த பின்பு உலகளாவிய வர்த்தகம் பாதிக்கப்படும் காரணத்தால் முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றம் உருவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த கணிப்புகள் சரியாக இருந்தால் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பின்பு சர்வதேச சந்தையில் இருக்கும் முதலீடுகள் மீண்டும் அமெரிக்க பத்திர சந்தைக்கு திரும்பும், இதனால் டாலர் மதிப்பு உயரும். மறுமுனையில் கச்சா எண்ணெய் விலையில் உயர்வு பாதை துவங்கியிருக்கும் வேளையில் பணவீக்க உயர்வால் உலக நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம் பாதிக்கப்படும். இப்படியிருக்கும் சூழ்நிலையில் பெரும் முதலீட்டாளருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு தங்கம் மட்டுமே.
இதனால் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை அடுத்த சில வாரத்தில் 1 லட்சம் ரூபாய் வரையில் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இன்று ரீடைல் சந்தையில் ஒரு சவரன் தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து 66,480 ரூபாயாக உள்ளது.