ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபியில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானும், இங்கிலாந்தும் நேருக்கு நேர் களமிறங்கின. அரையிறுதிச் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க இப்போட்டியில் கட்டாயம் வென்றாக நெருக்கடி இரண்டு அணிகளுக்கும் உண்டானது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்கத்திலேயே வெறும் 37 ரன்களில் ஆப்கானிஸ்தானின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. ஆனால், அந்த நல்ல தொடக்கத்தை இங்கிலாந்து அணியால் கடைசிவரை கொண்டு செல்ல முடியவில்லை.
ஒப்பனராக இறங்கிய இப்ராஹிம் சத்ரான், 50-வது ஓவரின் முதல் பந்துவரை களத்தில் நின்று தனியாளாக 177 ரன்கள் குவித்தார். கூடவே, ஹஷ்மதுல்லா ஷாஹிதி, அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி ஆகியோர் தங்கள் பங்குக்கு தலா 40 ரன்கள் அடித்தனர். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான்.
அதைத்தொடர்ந்து, 326 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில், நான்காவது ஓவரிலேயே பிலிப் சால்ட்டை 12 ரன்களில் அவுட்டாக்கி நல்ல மொமன்டம் ஏற்படுத்திக்கொண்டது ஆப்கானிஸ்தான். அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர் . ஆனாலும், ஜோ ரூட் நிதானமாக பாலுக்கு பால் ரன் அடித்துக்கொண்டிருந்தார். இங்கிலாந்து 133 ரன்களில் 4 விக்கெட் இழந்திருந்த சூழலில் அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ரூட்டுடன் வெற்றிக்கான ரூட்டை அமைத்தார்.

இங்கிலாந்து அணி 34-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது. ஆட்டம் ஆப்கானிஸ்தான் கையை விட்டு நழுவுகிறதா என்ற தருணத்தில் கேப்டன் ஜாஸ் பட்லரை 38 ரன்களில் அவுட்டாக்கி வாய்ப்பை தங்கள் வசம் தக்கவைத்தார் ஆப்கானிஸ்தான் பவுலர் அஸ்மத்துல்லா ஓமர்சாய். பட்லரைத் தொடர்ந்து களமிறங்கிய லிவிங்ஸ்டனை வந்த வேகத்திலேயே 10 ரன்களில் விக்கெட் எடுத்தார் குல்பதின் நயிப். 38.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்தபோதிலும், 90 ரன்களுடன் களத்தில் நிலையாக நின்றுகொண்டிருந்த ஜோ ரூட் கைகோத்தார் ஜேமி ஓவர்டன். கடைசி 60 பந்துகளில் 90 ரன்கள் அடிக்க வேண்டிய நிலைக்கு வந்தது இங்கிலாந்து. 41-வது ஓவரில் ஜோ ரூட்டின் பவுண்டரியுடன் 9 ரன்கள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, ரஷீத் வீசிய 42-வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 17 சதத்தை அடித்தார் ஜோ ரூட்.
அந்த ஓவரில் மொத்தமாக 6 ரன்கள் கிடைக்க, மீதமிருக்கும் 8 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 75 ரன்கள் தேவைப்பட்டது. 43-வது ஓவரில் ஜேமி ஓவர்டன் இரு பந்திலும் பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 10 ரன்கள் வந்தது. அடுத்து ரஷீத் கான் வீசிய 44-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஆனாலும், ஓடுவதற்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்த ஜோ ரூட் 45-வது ஓவரின் முதல் பந்திலேயே ஸ்கூப் ஷாட் மூலம் சிக்ஸர் அடிக்க அந்த ஓவர் முடிவில் இங்கிலாந்துக்கு 10 ரன்கள் கிடைத்தது. கடைசி 5 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது.

இங்கிலாந்துக்கு எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில் 46-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்மத்துல்லா ஓமர்சாய். ஜோ ரூட்டின் விக்கெட் வீழ்ந்தாலும் அந்த ஓவரில் மட்டும் 13 ரன்கள் வந்தது. 47-வது ஓவரில் ஆர்ச்சரின் பவுண்டரியுடன் 10 ரன்கள் வர, கடைசி 18 பந்துகளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட வேளையில், 48-வது முதல் பந்தில் ஆர்ச்சரின் கேட்சைத் தவறவிட்டார் ரஷீத் கான். அடுத்த பந்திலேயே பவுண்டரி அடித்த ஓவர்டன் அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் முகமது நபியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற அந்த ஓவரில் மொத்தமாக 9 ரன்கள் வந்தது. இங்கிலாந்து 12 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட சூழலில் 49-வது வீச வந்த ஃபசல்ஹக் ஃபரூக்கி அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் இங்கிலாந்தின் ஒன்பதாவது விக்கெட்டாக ஆர்ச்சரை விக்கெட் எடுத்தார்.

இங்கிலாந்தின் 6 பந்துகளில் 13 ரன்கள் என்ற சூழலில், அணியினரை அழைத்து ஆலோசனை வழங்கினார் ரஷீத் கான். இறுதி ஓவரை அஸ்மத்துல்லா ஓமர்சாய் வீசவந்தார். முதல் 4 பந்துகளில் 4 ரன்கள் வர, ஐந்தாவது பந்தில் இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டையும் வீழ்த்தினார் அஸ்மத்துல்லா ஓமர்சாய். மொத்தமாக இந்த ஆட்டத்தில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இங்கிலாந்தை சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து வெளியேற்றியது. 177 ரன்கள் அடித்த இப்ராஹிம் சத்ரான் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
Ibrahim Zadran: "365 நாள்களாக நான் ODI-ல் விளையாடவில்லை..." - நெகிழும் சாதனை வீரர் இப்ராஹிம் சத்ரான்