சமீப காலமாக சிறிய பட்ஜெட் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி தான் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படமும் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சினிமாவில் ஆரம்ப காலங்களில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. இப்போது ஓடிடி தளங்கள் வளர்ச்சி அடைந்த நிலையில், சிறிய பட்ஜெட் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதற்கு சிறந்த உதாரணமே லப்பர் பந்து, குடும்பஸ்தன், டிராகன் போன்ற படங்கள் தான். குடும்பஸ்தன் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அப்படி தான் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படமும் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் கயாடு லோகர், மிஷ்கின், கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான படம் தான் டிராகன். காதல், காமெடி, ஜாப், ரொமான்ஸ் காட்சிகளை மையப்படுத்தி வெளியான இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. டிராகன் திரைக்கு வந்து 25 நாட்கள் கடந்த நிலையில் இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரூ.37 கோடியில் எடுக்கப்பட்ட டிராகன் தற்போது வரை ரூ.150 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி 2025 ஆம் ஆண்டில் திரைக்கு வந்து ரூ.150 கோடி வசூல் குவித்த முதல் படம் என்ற மகத்தான சாதனையை டிராகன் படைத்துள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வந்த அஜித்தின் விடாமுயற்சி படம் இப்போது வரையில் ரூ.138 கோடி வரையில் தான் வசூல் குவித்திருக்கிறது. இதே போன்று தனுஷ் இயக்கத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரூ.15 கோடி வசூல் குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.