ARTICLE AD BOX
பாகிஸ்தானில் 8 அணிகள் கலந்துகொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணமாக துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதிபெறாமலேயே வெளியேறியுள்ளது. தவிர, இந்திய அணியிடம் அவ்வணி தோல்வியடைந்ததும் அதிக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது, 1996 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் முதல் ஐசிசி போட்டியாகும். இதனால், பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்த அணி அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியதால் விமர்சனங்கள் துளைத்தெடுக்கப்படுகிறது. சாம்பியன் டிராபிக்காக மைதானங்களைப் பராமரித்த அளவுக்குக்கூட, பாகிஸ்தான் அணி வீரர்களைத் தேர்வு செய்யவில்லை எனக் காட்டமாக விமர்சனம் வைக்கப்படுகிறது.
அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, "யாராக இருந்தாலும் நல்ல போட்டி, கடுமையான போட்டியை பார்க்கவே விரும்புவர். ஆம், நமக்கு நம் சொந்த நாட்டு அணி வெற்றி பெறவே விருப்பம். ஆனால், இன்று நான் இந்தப் போட்டியால் முற்றிலுமாக ஏமாற்றமடைந்துள்ளேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு போட்டி கூட அப்படியில்லை. டாஸ் தவிர்த்து, வேறு எதில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்? நீங்கள் எங்கள் மனங்களைக்கூட வெல்லவில்லை. ஆம், போட்டிகளில் நீங்கள் வெற்றி, தோல்வியை சந்திக்கலாம், ஆனால் தோல்விகளிலும் நீங்கள் மனங்களை வெல்லும் சூழல் நிச்சயம் உருவாகும். பாகிஸ்தான் இன்று நீங்கள் அதை கூட செய்யவில்லை” என விமர்சித்துள்ளார்.
அதேபோல் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமும் கடுமையாகச் சாடியுள்ளார். அவர், “பாகிஸ்தான் ஒரு நாள் கிரிக்கெட் அணியை முற்றிலும் மாற்றியாக வேண்டும். துடிப்பான இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வாருங்கள். 6 மாற்றங்களை செய்ய வேண்டும் என்றாலும் அத்தனையையும் செய்து விடுங்கள். 6 மாதமாக தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள், அது பரவாயில்லை.
2026 உலக டி20 கிரிக்கெட் தொடருக்கான பணியை இப்போதே தொடங்குங்கள். கடந்த 5 ஒருநாள் போட்டிகளில் வெறும் 24 விக்கெட்களே எடுத்துள்ளோம், ஒரு விக்கெட்டுக்கு சராசரி 60 ரன்கள். இந்த சராசரி ஓமன், அமெரிக்க அணிகளை காட்டிலும் இது மோசம். ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 14 அணிகளில் பாகிஸ்தானின் சராசரதான் 2வது மோசமான சராசரியாகும். செலக்ஷன் சரியில்லை. பாகிஸ்தான் பந்துவீச தொடங்கிய 15வது ஓவரில் இருந்து மைதானத்தில் இருந்து பாகிஸ்தான் ரசிகர்கள் வெளியேற தொடங்கினர். என் வாழ்நாளில் இதபோன்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. மிக மோசமான நிகழ்வு இது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், “பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவும் கிடையாது, என்ன செய்ய வேண்டும் என்று அணி நிர்வாகத்துக்கு தெரியவில்லை. மிகவும் அதிருப்தியாக இருக்கிறது. எப்படி செயல்பட வேண்டும் என்று அணியின் தலைமைக்கும் தெரியவில்லை. நாம் குழந்தைகளை குறை சொல்ல முடியாது. அணி நிர்வாகத்தினர் போன்று தான் வீரர்களும் உள்ளனர்” என அவரும் விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பாகிஸ்தான் அணி லீக் சுற்றை விட்டே வெளியேறி இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் அவ்வணி தோல்வியைச் சந்தித்ததும் மூத்த பயிற்சியாளர்கள் தங்களது பதவியை ராஜினா செய்ததும் கடந்த காலங்களில் பேசுபொருளாகவே இருந்தது.